×

3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகத்தை நடுங்க வைக்கும் கடுங்குளிர்: காலை, மாலை என 12 மணி நேரம் நீடிக்கும் பனியின் தாக்கம்

 

சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் நிலவி வருகிறது. டிட்வா புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதேபோன்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஒரு வாரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழியத் தொடங்கியது. இதற்கு பிறகு தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. வெயில் அடித்து வந்தாலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. டிசம்பர் இறுதியில் வீசும் குளிர் காற்று சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்திலேயே அதிகமாக வீசி வருகிறது. அதாவது, மார்கழி தொடங்குவதற்கு முன்பாக கார்த்திகை இறுதியிலேயே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இரவு 7 மணிக்கு தொடங்கும் குளிர்காற்று படிப்படியாக அதிகரித்து மறுநாள் காலை 7 மணி வரை என 12 மணி நேரம் நீடிக்கிறது.

இதனால் தற்போது, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகக் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவினாலும் மழை பெய்வது வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு திசை காற்றின் வேசு மாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பணி மூட்டம் காணப்படும்.

நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17ம்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 18ம்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 19, 20ம்தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவும் பனிமூட்டம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் வீசக்கூடிய குளிர்காற்று முன்பாகவே கிழக்குத் திசை காற்றாக, தமிழகத்தின் வடக்கு,வடகிழக்கு திசைகளில் வீசுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லாததால் வானம் தெளிவாகஉள்ளது. இதனால் மேகக் கூட்டம் இல்லாமல் குளிர் காற்றின் தன்மை அதிகம் நிலப்பரப்புக்கு வருகிறது. இவ்வாறு வரக்கூடிய நாட்களில் படிப்படியாக ஈரப்பதம் அதிகரித்து குளிர்காற்றும் மூடுபனியும் தீவிரமடையும்’’ என்றனர்.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Storm Tidwa ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...