ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஆரணியாற்றில் இருந்து பனப்பாக்கம் ஏரிக்கு செல்லும் பாலப்பணிகள் முடிந்தது, சாலை இணைப்பு பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு பெரியபாளையம் ஆரணியாற்றில் இருந்து பனப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாலம் பழுதடைந்ததால், புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் ரூ.90 லட்சம் செலவில் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கடந்த நவம்பர் 21ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பின்னர் பாலப்பணிகள் முடிந்தது. ஆனால் பாலத்தின் இணைப்பு பணிகள் நடைபெறவில்லை, ஜல்லி கற்கள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலை இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரியபாளையம் ஆரணியாற்றின் பாலத்தில் சாலை இணைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.