×

மே மாதம் இறுதியில் வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னை: வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் இம்மாதம் இறுதியில் புனரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் வள்ளுவர் கோட்டமும் ஒன்று. இது தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் முக்கிய ஆடிட்டோரியம் ஒரே நேரத்தில் 4,000க்கும் அதிகமான மக்கள் அமரக்கூடியது. திருக்குறளின் 1330 வசனங்கள் வள்ளுவர் கோட்டத்தின் பரந்த ஆடிட்டோரியத்தை இணைக்கும் முகடு அரங்குகளில் உள்ள கிரானைட் நெடுவரிசைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ரூ.80 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டம் உலகத்தரத்தில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘‘நவீன வசதிகளுடன் 1490 இருக்கைகளுடன் கூடிய குளிர்சாதன வசதியுடன் அங்குள்ள அரங்கு புதுப்பிக்கப்பட உள்ளது. பழமை மாறாமல் முன்னர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டதோ அதே முறையில் தற்போது புனரமைக்கப்பட உள்ளது. புனரமைப்பு பணிகள் முடித்த பிறகு இதனை பொதுவிழாக்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படும்’’ என்றார்.

புனரமைக்கப்பட உள்ள பணிகள்:

* 1490 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் நவீன வசதிகளுடன், ஒலி, ஒளி வசதி மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ளது.

* குறள்மணி மாடத்தில் உள்ள தூண்களில் பித்தளை பலகையில் திருக்குறள் மற்றும் கலைஞரின் விளக்க உரை பொறிக்கப்படவுள்ளது.

* திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம் நவீன வசதிகளுடன் புனரமைப்பு.

* 71,000 சதுர அடி பரப்பளவில் 273 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் 48 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி

* தோரண வாயிலின் இருபுறம் சாய்வு தள வசதியுடன் நுழைவாயில்கள்.

*பார்வையற்றோருக்கான சிறப்பு தரை அமைப்பு மற்றும் பிரெய்லி எழுத்து பலகை வசதி.

* திருவள்ளுவரின் சிலை காண நகரும் படிக்கட்டுகள், நீரியல் மின் தூக்கி வசதி.

* உட்புற பாதை புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதி புனரமைத்தல்.

* 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்.

* உயர்அழுத்த மின் வசதி, 250 கேவிஏ திறன் கொண்ட ஜெனரேட்டர் மற்றும் இதர மின் அமைப்புகள் புதுப்பிக்கப்பட உள்ளது.

* சுற்றுச்சுவர் சிற்ப வேலைபாடுகளுடன் புனரமைத்தல், இசைநடன நீரூற்று, ஊடாடும் கணிபொறியகம், நவீன உணவு கூடம், புல்வெளி அமைத்தல், ஒளி, ஒலி அமைத்தல்.

The post மே மாதம் இறுதியில் வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Valluvar Gotam ,Public Department ,Chennai ,Valluwar Gotam ,Tamil Nadu ,Department ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...