×

சிறுமழைக்கு தாக்குப்பிடிக்காத வஉசி மைதான மேற்கூரையை முழுமையாக சீரமைக்க வேண்டும்

*விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை : பாளை வஉசி மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பார்வையாளர் கேலரி மேற்கூரையின் ஒரு பகுதி சிறுமழைக்கு தாக்குப்பிடிக்காமல் சரிந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பை கருதி கேலரி மேற்கூரையில் முழுமையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை. வஉசி மைதானம் ரூ.14 கோடியில் புனரமைக்கப்பட்டது.

இங்கு கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்குகளை இடித்து விட்டு புதிய மேற்கூரையுடன் கூடிய பார்வையாளர் அரங்குகள் அமைக்கப்பட்டன. நவீன வண்ணமயமான இருக்கைகள், கண்காணிப்பு கேமிராக்கள், நடைபாதை, ஓடுதளம் உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வசதியாக மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த வசதியாக வஉசி மைதானம் சீரமைக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம், கலைநிகழ்ச்சிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மைதானம் கோலாகலமாக திறக்கப்பட்டது. வஉசி மைதானம் திறக்கப்பட்டு 10 மாதம் கூட நிறைவடையாத நிலையில், கடந்த 22ம் தேதி நெல்லையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் வஉசி விளையாட்டரங்க புதிய பார்வையாளர் அரங்க மேற்கூரையின் ஒரு பகுதி முழுமையாக பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதையடுத்து மாநில நகராட்சிகள் நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளர் பாண்டுரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள், மாநகராட்சி பொறியாளர்கள் சேதமடைந்த பார்வையாளர் மேற்கூரை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தற்போது சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வஉசி விளையாட்டரங்கில் விளையாட்டுகள் நடைபெறும் போது வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளானவர்கள் பங்கேற்பார்கள்.

எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த பகுதியை மட்டும் சீரமைக்காமல் பார்வையாளர் அரங்கம் அமைந்துள்ள பகுதி முழுவதும் மேற்கூரையை மறு ஆய்வு செய்து முழுமையாக சீரமைக்க வேண்டுமென விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சிறுமழைக்கு தாக்குப்பிடிக்காத வஉசி மைதான மேற்கூரையை முழுமையாக சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vausi Stadium ,Smart City ,Palai Vausi Stadium ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...