×

மீஞ்சூரில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

பொன்னேரி: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து, அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் காவல் நிலையம் அருகே நெமிலிச்சேரி சோதனைசாவடியில், மீஞ்சூர் எஸ்ஐக்கள் சதீஷ், சசிகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக, ஆந்திரா நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், சுமார் 15 டன் எடை ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, லாரியில் இருந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களை விசாரித்தனர்.

அதில், அவர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மணி மகன் காமேஷ்(28), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாண்டுரெங்கன் மகன் ராஜி(41) மற்றும் லாரி ஓட்டுனரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் சுரேஷ்(43) இவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து, பின்னர் அவற்றை மூட்டைகளாக கட்டி லாரி மூலமாக ஆந்திராவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி, லாரி மற்றும் இருவரையும் திருவள்ளூர் மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மீஞ்சூரில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Andhra Pradesh ,Ponneri ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை