×

சென்னையில் மழை எதிரொலி கோயம்பேட்டில் பூக்கள், பழம் விலை கடும் சரிவு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இருப்பினும், வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள், பழங்கள் ஆகியவற்றின் வியாபாரம் மந்தமானது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்தனர். குறிப்பாக பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் வியாபாரம் பாதிக்கப்பட்டதால், குப்பையில் கொட்டப்பட்டன.

சீசன் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் குவிந்து வருவதால் ஒரு கிலோரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் வாங்க ஆட்கள் இல்லாததால் டன் கணக்கில் மாம்பழங்களை குப்பையில் கொட்டி வருகின்றனர். இதுபோல், மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம்ரூ.200க்கும் ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லைரூ.150க்கும், சம்பங்கி, பன்னீர்ரோஸ்ரூ.20க்கும், சாக்லேட் ரோஸ்ரூ.40க்கும் அரளி பூ 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால், பூக்களை வாங்க வரும் புறநகர் சில்லரை வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால், பூ வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் வரும்போது மீண்டும் பூக்களின் விலை உயரும்’’ என்றார்.

The post சென்னையில் மழை எதிரொலி கோயம்பேட்டில் பூக்கள், பழம் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Koyambedu market ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...