×

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு 1,250 காளைகள், 525 காளையர் பங்கேற்பு

பொன்னமராவதி: புதுக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டி மற்றும் தேனிமலையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,250 காளைகள், 525 காளையர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. 225 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை ஆர்ஓடி குழந்தைசாமி தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி ஊர் ஜவுளி எடுத்துவரப்பட்டு முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், குக்கர், டிவி, மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 650 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

The post புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு 1,250 காளைகள், 525 காளையர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pudukottai ,Ponnamaravati ,Manganampatti ,Thenimalai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...