×

ரூ.20 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு அதிமுக ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு

மன்னார்குடி: ரூ.20 கோடி மதிப்பு சொத்தை அபகரித்த வழக்கில் மன்னார்குடி அதிமுக ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கர்த்தநாதபுரத்தை சேர்ந்தவர் ரோஸ்லின். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தனது மாமியார் ஞானம்பாள் பெயரில் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் மோசடி செய்துள்ளனர். இதில், மன்னார்குடி ஒன்றிய குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த மனோகரன் (58) உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து 2017ம் ஆண்டு திருவாரூர் எஸ்பியிடம் புகார் அளித்தேன். அதன்பேரில், மனோகரன் உள்ளிட்ட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி நடந்தது. அப்போது நீதிபதி சந்திரசேகரன் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், சிபிசிஐடி போலீசார் மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று காலை ஏழு மணி அளவில் இரண்டு கார்களில் மன்னார்குடிக்கு வந்தனர்.
பின்னர் மன்னார்குடி, கனகாம்பாள் கோயில் தெருவில் உள்ள மனோகரன் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மன்னார்குடி, கம்மாளர் தெருவில் உள்ள மனோகரனின் அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீசார், மதியம் ஒரு மணி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மனோகரன் முன்ஜாமீன் பெற்றிருப்பதையடுத்து சிபிசிஐடி போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ரூ.20 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு அதிமுக ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBCID ,AIADMK union ,Mannargudi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...