×

தனியார் நிறுவனம் தொடங்கி ஊழல் செய்த விவகாரம் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தர் வீடு, ஆபீஸ் உள்பட 8 இடத்தில் சோதனை: பதிவாளர், பேராசிரியர்கள் தலைமறைவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி நிதியிழப்பு ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் தொடர்புடைய 8 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் மீதான பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியருமான இளங்கோவன் என்பவர், நேற்று முன்தினம் கருப்பூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து வரும் ஜெகநாதன், பதிவாளர் (பொ) தங்கவேல் ஆகியோர் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து, கோவையில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தை வணிக நோக்கத்தோடு தொடங்கியுள்ளனர். இந்நிறுவனத்திற்கு, பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் மற்றும் அரசு அனுமதியின்றி மோசடியாக பெரியார் பல்கலைக்கழக முகவரியை பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்துக்காக பல்கலைக்கழக வளாகத்தில், 2,024 சதுரடி கொண்ட அறை அந்நிறுவனத்திற்கு பதிவாளரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் துணைவேந்தரும், பதிவாளரும் பல்கலைக்கழகத்தின் பெயரில் பணம்பெற்று அதனை கையாடல் செய்யும் நோக்கத்தோடு, இதர நபர்களுடன் சேர்ந்து கூட்டு சதிசெய்து லாபம் அடைய முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க துணைவேந்தரை சந்தித்தபோது, எனது சாதியைக்கூறி திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த போலீசார், சேலம் 2வது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அரசு வழக்கறிஞரும், ஜெகநாதன் தரப்பு வழக்கறிஞரும் வாதம் செய்தனர். நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 3.30 மணிவரை இந்த வாதம் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதில், 7 நாட்களுக்கு சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று காலை துணைவேந்தர் ஜெகநாதன், உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வுமாளிகை விடுதி, பதிவாளர் அலுவலகம், கணினி அறிவியல் துறை அலுவலகம், அந்த துறையின் தலைவராக உள்ள துணை வேந்தருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி அறை, சேலம் சூரமங்கலத்தில் உள்ள துணைவேந்தரின் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று போலீசார் அதிரட் சோதனை நடத்தினர். அப்போது துணைவேந்தர் இல்லத்தில் இருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. முறைகேடு புகாரில் சிக்கியுள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ராம்கணேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* வேண்டுகோளும், உத்தரவும் ஒருவரே
சட்ட ஆலோசகரான இளங்கோவன் தனது புகாரில், ‘துணைவேந்தரும், பதிவாளரும் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு, பல்கலைக்கழகத்தில் பெரிய அறையை ஒதுக்கீடு செய்ததுடன், அரசை ஏமாற்றி மோசடியாக ஆணை வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, துணைவேந்தர் ஜெகநாதனின் ஆணைப்படி, தனியார் நிறுவனத்திற்கு அறை ஒதுக்கீட்டிற்கான கடிதத்தை வழங்கியதும், பூட்டர் பவுண்டேசனின் தலைமை செயல் அலுவலராக இருந்து அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டதும், பதிவாளர் தங்கவேல் என்ற ஒருவரே என்பதுதான் மிகப்பெரிய மோசடியாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

* நிதியிழப்பு கணக்கீட்டில் போலீசார் அதிர்ச்சி
சம்பந்தப்பட்ட பூட்டர் பவுண்டேசன் செயல்பட பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆண்டுக்கு ரூ.1,000 என்ற குறைந்த வாடகையில் 2,024 சதுரடி கொண்ட அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திலேயே பல்கலைக்கழக கட்டிடம், மின்சாரம், குடிநீர், பேராசிரியர்கள், பணியாளர்கள் போன்ற வளங்களை அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனியார் வங்கிக்கு இதைவிட குறைந்த அளவிலான இடம் ஒதுக்கீடு செய்து, அதற்கு மாதத்திற்கு ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக வாடகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், துணைவேந்தரும், பதிவாளரும் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுமென்றே பலமடங்கு நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

* இதயத்தில் அடைப்பு : துணைவேந்தர் ஐசியுவில் அனுமதி
துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதால் நேற்று காலை சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக 5 ரோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பகல் 1.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியு பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post தனியார் நிறுவனம் தொடங்கி ஊழல் செய்த விவகாரம் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தர் வீடு, ஆபீஸ் உள்பட 8 இடத்தில் சோதனை: பதிவாளர், பேராசிரியர்கள் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!!