சென்னை: ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி தொடக்கவிழா இன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடக்கிறது. போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் கண்காணிக்கும் வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023’ விளையாட்டு போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. விளையாட்டு போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நிசித் பிரமானிக், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் சென்னை மாநகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு வரும் பிரதமர் மோடி மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, சென்னை விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் வரையும், தங்கும் இடங்களிலும் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, நேரு விளையாட்டு அரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், அதன் சுற்றுப்புறங்களில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை காவலர்கள், கமாண்டோ படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 22 ஆயிரம் போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைகளில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரித்தனர். மேலும், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், வான் வழி தாக்குதல்களை தடுக்கும் வகையில் சென்னை மாநகரம் முழுவதும் இன்று முதல் பிப்ரவரி 29 வரை 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ், டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம், ஐஎன்எஸ் அடையாறு, நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம், ராஜ்பவன் ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடைவிதித்து ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரேனும் டிரோன் பறக்க விட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். விளையாட்டு தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 4.50 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு சென்று, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இரவு 7.45 மணிக்கு காரில் புறப்பட்டு, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வருகிறார். இரவு அங்கு தங்குகிறார். அதை தொடர்ந்து, சென்னை விமானநிலையம் முதல் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நேற்று அதிகாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்கு வந்தது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கக பிரிவு, கூரியர் பிரிவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம், ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் வருவதற்கு அனுமதி இல்லை. நிரந்தர பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டைகளை வெளியே தெரியும்படி தொங்கவிட்டு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் கலந்துகொள்ளும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் சாலை மார்க்கமாக செல்லும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை (20ம் தேதி) காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து காலை 9.25 மணியளவில் தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதேஸ்வரர் கோயிலுக்கு காரில் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார். அங்கு வழிபாடுகள் நடத்திவிட்டு, வரும் ஞாயிறன்று (21ம் தேதி) தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.
* வான்வழி கண்காணிப்பு
முக்கிய பகுதிகள், கடற்கரை பகுதி முழுவதும் ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடலோர பகுதி முழுவதும் மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் நேற்று துவங்கி 24 மணி நேரமும் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து கப்பல்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஎன்எஸ் விமான தளத்தில் இருந்து இன்று முதல் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது. மீனவர்கள் 20, 21ம் தேதிகளில் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு மோடி வருவதையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post ‘கேலோ இந்தியா’ போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகை சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: 22 ஆயிரம் போலீஸ் கண்காணிப்பு, டிரோன்கள் பறக்க தடை, ஓட்டல், லாட்ஜ்களில் சோதனை appeared first on Dinakaran.