×

கர்ப்பம் மற்றும் ஆட்டிஸம்!

நன்றி குங்குமம் தோழி

கர்ப்ப காலம் என்பது, அதிக மென்மையான மற்றும் இக்கட்டான நிலையாகும். இக்காலகட்டத்தில் மிக அதிகமாக அக்கறையும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை இவ்வேளையில் எதிர்கொள்கின்றனர்.இதன் விளைவாக தாயின் கர்ப்பப்பையில் வளரும் குழந்தை இந்த மாற்றங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது என்றார் மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

‘‘குழந்தையின் ஆரம்பகட்ட சூழல் மிக முக்கியமானது. ஆட்டிஸம் என அழைக்கப்படுகின்ற மதியிறுக்க நிலையானது, கருவுற்ற காலத்தின் போது உருவாகிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கருவுற்ற காலத்தில் உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக்கசிவு ஆகியவற்றோடு சிசேரியன் முறையிலான பிரசவம் அல்லது குறை மாதத்தில் பிரசவம் போன்றவை ஆட்டிஸம் பாதிப்பால் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆட்டிஸம் ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. ஆட்டிஸம், பிரதானமாக மரபணு சார்ந்ததாகும். எனினும், தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பிரசவத்திற்கு முந்தைய நிலையில் ஏற்படுகின்ற பிற வெளிப்பாடுகள் தான் இந்த பிரச்னை ஏற்பட காரணமாகும். கருவுற்ற காலத்தின்போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 250,000 நியூரான்களை வளர்கருவில் மூளை உற்பத்தி செய்வதால் குழந்தை வளரும் ஆரம்பநிலை சூழலான கருவகம் மிக மிக முக்கியமானது. இதில் ஏற்படும் பாதிப்பு வளர்ச்சியடைந்து வரும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கர்ப்ப காலத்தின்போது இடம்பெறுகின்ற பல்வேறு கூறுகளோடு ஆட்டிஸம் இணைந்திருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தாயின் உணவுமுறை, அவள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அவளது மனநலம், நோயெதிர்ப்பு திறன், உயர் ரத்த நிலை, கருவுற்ற காலத்தில் ஏற்படும் நீரிழிவு பிரச்னை, வளர்சிதை மாற்ற நிலைகள் போன்றவை உள்ளடங்கும்.

நீரிழிவு இருக்கின்ற பெண்கள் கருவுற்ற காலத்தின் போது மனநல சிகிச்சைக்கான மருந்துகளை உட்கொள்ளும்போது ஆட்டிஸத்திற்கான இடர் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும் ரத்தம் உறைதலில் ஏற்படும் சீர்கேடு, கருப்பையில் உள்ள கருவில் ஏற்படும் வளர்ச்சி பாதிப்பு, தாய்மை சார்ந்த உடற்பருமன் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய வைரஸ் தொற்று போன்றவையும் ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது.

கருத்தரித்த பிறகு முதல் சில நாட்கள் உட்பட, கருவுற்ற காலம் முழுவதும் நிகழ்கின்ற நிகழ்வுகளோடு ஆட்டிஸம் தொடர்புடையதாக இருக்கிறது. கருவுற்ற காலத்தின் மூன்று பருவங்களில் கடைசி மூன்று மாதங்கள் குழந்தையின் உடல் எடையில் கணிசமான வளர்ச்சி ஏற்படுகின்ற காலமாகும். எனினும், மிக முக்கியமான மூளை வளர்ச்சி என்பது, முதல் மற்றும் இரண்டாவது பருவ காலத்தின்போது நிகழும்.

ஆரம்ப கருத்தரிப்பு காலத்தின்போது, முக்கியமான மூளைத்தண்டு இயக்கமுறைகள், அதன் பிறகு ஏற்படும் மூளை வளர்ச்சியின் அடித்தளமாக அமைகின்றன. இதன் மூலம் ஆய்வில் கருவுற்ற காலத்தில் முதல் மற்றும் இரண்டாவது பருவகாலத்தின் போதுதான் ஆட்டிசம் பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பேச்சு, மொழி அல்லது தசை இயக்க திறன் வளர்ச்சியில் ஏதாவது தாமதங்கள் காணப்படுமானால், அதற்கு உடனடியாக மருத்துவ சோதனையும் மற்றும் உரிய சிறப்பு மருத்துவ நிபுணரின் சிகிச்சையும்ஆலோசனையும்
அவசியமாகும்.

இரும்புச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஐந்து மடங்கு அதிகம் இருப்பதாக 2014ல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒரு தாய் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவராக அல்லது உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பாதிப்பு நிலையை கொண்டிருந்தால், அவர்கள் கருவில் உருவாகும் குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ASD – Autism Spectrum Disorder, இந்த பாதிப்பு ஒருவரின் குடும்ப வரலாற்றில் இருந்தாலும், அந்த குடும்பத்தில் பிறக்கும் மற்ற குழந்தைக்கும் அதன் பாதிப்பு ஏற்படும்.

ஒரு பெண்ணின் ஆரோக்கியமானது, அவளது குழந்தையின் நல்ல உடல்நலத்திற்கு அத்தியாவசியமானதாகும். பிரசவத்திற்கு முன்பு குறித்த கால அளவுகளில் உரிய பரிசோதனைகளுடன் சேர்த்து நன்றாக உணவு உட்கொண்டு, தவறாது உடற்பயிற்சி செய்கின்ற பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சிக்கல்கள் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும். கர்ப்ப காலத்தின்போது ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்வதற்கும் கருவகத்தில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி, ஆரோக்கியமான பிறப்பு எடை ஆகியவற்றிற்கும் பிணைப்பு இருக்கிறது.

குழந்தை பிறக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு இடர்பாடுகளை இது குறைக்கிறது. நல்ல ஊட்டச்சத்து, உணர்வுகளின் ஏற்ற இறக்கத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. அத்துடன், இயல்பான பிரசவம் நடைபெறும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறது. ரத்தசோகைக்கான இடர்கள், களைப்பு மற்றும் காலைநேர அசௌகரியம் போன்ற அறிகுறிகள் சமச்சீரான உணவு உட்கொள்ளலை குறைக்கும். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு கருவுற்ற பெண்ணும் சீரான உணவு பழக்கத்தினை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

தொகுப்பு: நிஷா

The post கர்ப்பம் மற்றும் ஆட்டிஸம்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED ‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங்...