×

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு!

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏடிஸ் கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் ஏற்படும் என்பதால் அதனை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலாக கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Health Department ,Chennai ,
× RELATED கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்...