×

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து, சென் முன்னேற்றம்: பேட்மின்டனில் பதக்க நம்பிக்கை

பாரிஸ்: ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியின் மகளிர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மகளிர் ஒற்றையர் எம் பிரிவில் இடம் பெற்றுள்ள சிந்து, தனது முதல் ஆட்டத்தில் மாலத்தீவின் பாத்திமா அப்துல் ரசாக்கை 21-9, 21-6 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

தொடர்ந்து நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் எஸ்டோனியாவின் குவ்பா கிறிஸ்டியன் உடன் மோதினார். அதில் சிந்து 21-5, 21-10 என நேர் செட்களில் வென்றார். அதன் மூலம் எம் பிரிவில் முதலிடத்தை பிடித்த சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறி உள்ளார். ஆண்கள் ஒற்றையர் எல் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர் லக்‌ஷயா சென், முதல் ஆட்டத்தில் கவுதமாலாவின் கென் கார்டனை 21-8, 22-20 என நேர் செட்களில் வென்றார். அடுத்து பெல்ஜியம் வீரர் ஜூலியன் கர்ராகியை 21-19, 21-14 என நேர் செட்களில் போராடி வென்றார்.

கடைசியாக நேற்று நடந்த 3வது ஆட்டத்தில் இந்தோனேசியா வீரர் ஜோனதன் கிறிஸ்டி உடன் சென் மோதினார். அதிலும் 21-18, 21-12 என நேர் செட்களில் வென்று அசத்தினார். அதன் மூலம் எல் பிரிவில் மோதிய எல்லா ஆட்டங்களிலும் வென்ற வீரராக லக்‌ஷயா சென் முதல் இடத்தை பிடித்ததுடன், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் சி பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால், பேட்மின்டனில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

The post காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து, சென் முன்னேற்றம்: பேட்மின்டனில் பதக்க நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Sindhu, Sen ,Paris ,India ,PV Sindhu ,Lakshya Sen ,Olympic Badminton Championships ,Rio de Janeiro Olympics ,Tokyo ,Sindhu ,Sen ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு