×

வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக் மோதி காவலர் படுகாயம்: தப்பிய ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தறிகெட்டு வந்த பைக் மோதி காவலர் படுகாயம் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவைச் சேர்ந்தவர் மணி (35). இவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஓட்டுநர் ரவிக்குமார் என்பவருடன் மணி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

11 மணியளவில் ஓட்டேரி ஏகாங்கிபுரம் 1வது தெரு வழியாகச் சென்று, பனந்தோப்பு ரயில்வே காலனி ராகவேந்திரா கோவில் அருகே அவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த பைக்கை காவலர் மணி தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது பைக்கில் வந்த நபர் காவலர் மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் மணி அருகில் இருந்த சிமென்ட் ரோட்டில் விழுந்தார்.

இதில் தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் சிராய்ப்பு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை ஓட்டுநர் ரவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி காவலரை இடித்துத் தள்ளிய நபரை தேடி வருகின்றனர்.

The post வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக் மோதி காவலர் படுகாயம்: தப்பிய ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Otteri ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி,...