×

சுட்டு விடுவேன் என மிரட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்: துப்பாக்கி பறிமுதல்


திருச்சி: திருச்சி அருகே சுட்டு விடுவேன் என போலீசாரை மிரட்டிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (எ) அலெக்ஸாண்டர்(29). பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி, மணிகண்டம், பொன்மலை, தொட்டியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் 30க்கும் மேல் உள்ளது. இவரை பிடிக்க திருச்சி எஸ்பி வருண் குமார் உத்தரவிட்டார். அதன்படி தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் தர்மபுரியில் பதுங்கி இருந்த அலெக்சை கைது செய்து, நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது நடத்திய விசாரணையில் தொட்டியம் அருகே நீலியாம்பட்டி மலையடிவாரத்தில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக அலெக்ஸ் கூறினார். இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய நேற்றிரவு அலெக்சை நீலியாம்பட்டிக்கு அழைத்து சென்றனர். அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்ட அலெக்ஸ், மரங்களுக்கு இடையே பதுங்கி நின்று கொண்டு யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன், குண்டு வீசி விடுவேன் என்று போலீசாரை மிரட்டினார். இருப்பினும் போலீசார் நெருங்கியபோது குண்டு என்று கூறி அலெக்ஸ் போலீசார் மீது ஒரு பொருளை வீசினார். அது முதல் நிலை காவலர் ராஜேஷ் குமாரின் இடது தோள்பட்டையில் விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் வீசியது குண்டு அல்ல, கல் என்பது பிறகு தெரிய வந்தது.

இதையடுத்து அலெக்ஸ் போலீசாரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் அலெக்சின் இடது கால் முட்டிக்கு கீழ் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் அலெச்சை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அலெக்ஸ் 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கல் வீச்சில் காயமடைந்த போலீஸ்காரர் ராஜேஸ்குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post சுட்டு விடுவேன் என மிரட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்: துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி