×

“பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டும் தான் உள்ளது; அன்புமணிக்கு இல்லை”: ராமதாஸ் திட்டவட்டம்

விழுப்புரம் : “கட்சியில் இருந்து அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது”என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில், “எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. அன்புமணியின் செயலால் எனக்கு வேதனையாக உள்ளது. எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நான் நடத்தி வருகிறேன். நிர்வாகிகள் நியமனம் குறித்து அன்புமணி கூறும் சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை. ஆனால் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ.வை நீக்க அன்புமணிசுக்கு அதிகாரம் இல்லை. ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான் அருளை நீக்க முடியும். பாமக கொறடாவாக அருள் தொடர்வார். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளேன்.திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி பா.ம.க., மகளிர் மாநாடு நடத்துகிறோம்.கட்சியை தொடர்ந்து நானே வழிநடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே அன்புமணி தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு, “அன்புமணி குறித்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அன்புமணி குறித்து கேள்வியை கேட்காமல், வேறு கேள்வியை கேளுங்கள்,”என ராமதாஸ் பதில் அளித்தார்.

The post “பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டும் தான் உள்ளது; அன்புமணிக்கு இல்லை”: ராமதாஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Bamaka MLA Ara ,Anumani ,Ramadas ,Viluppuram ,Grace ,Bamaka ,Palamaka ,Thailapuram ,Bamaka MLA ,Ramadas Shivatam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...