×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100க்கு 100 எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இன்ஜினியரிங், பி.காம் படிப்புக்கு கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 23,957 பேர். ஆனால், இந்த ஆண்டில் 32 ஆயிரத்து 501 பேர் எடுத்துள்ளனர். இதனால் இன்ஜினியரிங் மற்றும் கலைக் கல்லூரிகளில் தங்களுக்கு தேவையான பாடப்பிரிவில் சேர்வதில் கடும் போட்டி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மாநில பாடத்தில் 114 மாணவ-மாணவிகள் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இதன் மூலம் கட்-ஆப் மதிப்பெண்ணும் உயர்கிறது. கடந்த ஆண்டில் அனைத்து வாரிய பாடங்களின் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 134 பேர் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டு மாநில வாரியத்திலேயே 114 பேர் வந்துவிட்ட நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை போல கடினமாக விரும்பும் படிப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்கின்றனர் ஆசிரியர்கள். இதேபோல், கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வணிகவியலில் 4 ஆயிரத்து 634 பேர் 100 மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 5,678 பேர் பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 22% அதிகம். கணக்குப்பதிவியலை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு 4,540 பேர் 100 மதிப்பெண்களை எடுத்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அது 44 சதவீதமாக அதிகரித்து, 6,573 பேர் பெற்றுள்ளனர்.
கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பி.காம் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தால், நகரங்களில் அமைந்துள்ள கலை கல்லூரிகளில் பி.காம் இடங்களை பெறுவதற்கு கடும் போட்டி ஏற்படலாம். இதுதவிர, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்விலும் வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் மிக எளிதாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக வரக்கூடும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100க்கு 100 எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இன்ஜினியரிங், பி.காம் படிப்புக்கு கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...