×

பெருந்துறை அருகே வீட்டில் பதுங்கி இருந்த 5 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு: காயத்துடன் 2 பேர் சிக்கினர்

ஈரோடு: பெருந்துறை அருகே வீட்டில் பதுங்கியிருந்த 5 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க முயற்சித்தனர். அதில் ரவுடிகள் 2 பேர் காயத்துடன் சிக்கினர். நெல்லையை சேர்ந்தவர் சிவசுப்பு என்ற சுப்பிரமணி (26). இவர் மீது, கொலை, கொள்ளை, சட்ட விரோதமாக ஆயுதங்கள், வெடிமருந்துகள் பயன்படுத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா ஆகியோர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ ஆண்டோ தலைமையில் 5 போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறை வந்தனர். சிவசுப்பு மற்றும் கூட்டாளிகள் பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் எஸ்ஐ ஆண்டோ துப்பாக்கி ஏந்தியபடி வீட்டிற்குள் சென்று அவர்களை பிடிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவுடி சிவசுப்பு அரிவாளால் ஆண்டோவை தாக்க முயன்றார். இதில், அதிர்ஷ்டவசமாக தப்பிய எஸ்ஐ ஆண்டோ பாதுகாப்பு கருதி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஆனாலும் சுதாரித்துக்கொண்ட சிவசுப்பு உட்பட 5 பேரும் வீட்டின் பின்புறமாக தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினர். எஞ்சிய 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரும் திருநெல்வேலி அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 3 ரவுடிகளும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெருந்துறை அருகே வீட்டில் பதுங்கி இருந்த 5 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு: காயத்துடன் 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Erode ,Sivasubbu ,Subramani ,Nellai ,Dinakaran ,
× RELATED வரும் 26ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்