×

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து நீர்நிலைகளில் குப்பை கழிவு கொட்டினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் நீர்நிலைகள், பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், குப்பை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. நாள்தோறும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி, வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் இவ்வாறு சேகரிக்கப்பட்டு, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அதேசமயம், கட்டுமான பணியின்போது வெளியேற்றப்படும் கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக புகார் எழுந்து வருகிறது. கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. மழைநீருடன் கட்டிட கழிவுகள் தேங்கி வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்கின்றன.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து அகற்றிட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 27500 பணியாளர்கள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 6310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கட்டிட கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. மழைநீருடன் கட்டிட கழிவுகள் தேங்கி வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்கின்றன. எனவே, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து அகற்றிட முடிவு செய்துள்ளோம்.

குடியிருப்புகளுக்கு அருகே உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள், டிரோன் மூலம் கொசு ஒழித்தல், சாலைகளின் தரத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை இந்த இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். இதை மீறும் நபர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்,’’ என்றனர்.

The post அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து நீர்நிலைகளில் குப்பை கழிவு கொட்டினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...