×
Saravana Stores

ஆந்திர மக்களின் அன்பும், அரவணைப்பும் இல்லையே… என்ன நடந்தது என யூகிக்கவே முடியவில்லை: ஜெகன்மோகன் கலக்கம்

திருமலை: ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த ஒரே கட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 5 ஆண்டு ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 12 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 134 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகளான ஜனசேனாவுக்கு 21ம், பாஜவுக்கு 8 இடங்களும் கிடைத்தன. இதன்மூலம் 5 ஆண்டுகளாக ஆண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது முதல்வர் பதவியை ஜெகன்மோகன் ராஜினாமா செய்து நேற்றிரவு கவர்னர் அப்துல் நசீமுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் நேற்றிரவு ஜெகன்மோகன் கண்கலங்கியபடி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் ஆச்சரியமாகவும், எதிர்பார்க்காத வகையில் உள்ளது. ₹2.75 லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கினோம். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு பென்ஷன் என யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்த்தி வழங்கினோம். வீடு தேடி சென்று 1ம் தேதி பென்ஷன் வழங்கும் திட்டம், 1.05 கோடி மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன், ஆட்டோ, டாக்ஸி, நெசவாளர்கள், மீனவர்கள், நடைபாதை வியாபாரிகள், டெய்லர், சவரத்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வாரி, வாரி வழங்கினோம். ஆனால் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியும் ஆந்திர மக்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்ன ஆனது? என தெரியவில்லை.

என்ன நடந்தது என யூகிக்கவே முடியவில்லை. இருப்பினும் ஏழைகளுக்கு எப்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும். பாஜ, தெலுங்கு தேசம், ஜனசேனா என மாபெரும் கூட்டணி அமைத்து என்னை எதிர்த்தார்கள். இதனால் 40 சதவீத வாக்குகள் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அரசியல் வாழ்க்கையில் பல இன்னல்களையும், கஷ்டத்தையும் சந்தித்துள்ளேன். இனியும் அதை சந்திப்பேன். கட்சியை மீண்டும் பலப்படுத்துவேன். வெற்றி பெற்று ஆட்சி அமைப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திர மக்களின் அன்பும், அரவணைப்பும் இல்லையே… என்ன நடந்தது என யூகிக்கவே முடியவில்லை: ஜெகன்மோகன் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : AP ,Jeganmohan riots ,Thirumalai ,Andhra Pradesh ,YSR Congress party ,Jehanmohan ,Jeganmohan Riot ,
× RELATED எனது மகன் என்னை கொல்ல பார்க்கிறாரா?...