×

திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் மக்கள் குவிந்தனர்: இன்று முதல் பார்வையிட அனுமதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. இதற்குள் நுழைந்தவுடன் ஹாலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளை போற்றும் பழைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைஞரின் வாழ்க்கை வரலாறு படங்கள், குறும்படங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.

முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இந்நிலையில் கலைஞர் கோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று காலை 9 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20 மற்றும் சிறுவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டது. முதல் நாளான இன்று ஏராளமானோர் கலைஞர் கோட்டத்தை ரசித்து பார்த்தனர். தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் கலைஞர் கோட்டத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் மக்கள் குவிந்தனர்: இன்று முதல் பார்வையிட அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,Kattur, Tiruvarur district ,Dayalu Ammal Foundation ,
× RELATED நீடாமங்கலத்தில் வழிபறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது