×

இந்த வார விசேஷங்கள்

10.6.2023 – சனி கருட தரிசனம்

இன்று சனிக்கிழமை ஸ்திரவாரம் கருட தரிசனம் செய்வதன் மூலமாக பல நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு நாள் கருட தரிசனத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதுவும் இன்று காலை சதய நட்சத்திரம் என்பதால் கருட தரிசனம் சாலச் சிறந்தது. “கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்நர சத்ரவே வாஹனாய மஹா விஷ்ணோ தார்ஷ்யாய நம:” என்ற துதியை 27 முறை சொல்லுங்கள்.

சனி தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சந்நதியில் நல்லெண்ணெய் சேர்த்து தீபம் போட்டு வலம் வரவும். முக்கியமாக அங்கே இருக்கக்கூடிய சிவனையும், அம்பாள் சந்நதியையும் வலம் வந்து, பிறகு சனி பகவானிடம் பிரார்த்தனை செய்யவும்.

11.6.2023 – ஞாயிறு
ஆஞ்சநேயருக்கு உகந்த நாள்

திருப்பதியில் மேலே இருக்கக்கூடிய பெருமாள் திருமலை அப்பன். கீழ் திருப்பதியில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிந்தராஜப் பெருமாள். அந்த கோவிந்தராஜ பெருமாளுக்கு நேர் எதிரிலே பிரசித்தமான ஒரு அனுமார் சந்நதி, கோயிலைப் பார்த்தபடி இருக்கும். இந்த சந்நதியைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் மிகப் பெரிய வரப்பிரசாதி. இந்த ஆஞ்சநேயரை வணங்கிவிட்டுத்தான் நாம் மலை ஏற வேண்டும். பெருமாளையும் சேவிக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் நாளை நடைபெறும் (11.6.2023). அவரை நினைத்து இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அசாத்ய சாதக ஸ்வாமிந்
அசாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்வதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். காரியங்கள் ஏதேனும் தடைப்பட்டு இருந்தால் தடைபட்ட காரியம் விரைவில் முடியும்.

14.6.2023 – புதன்
யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு யோகினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் எத்தனை உடல் நோயாக இருந்தாலும் தீர்ந்துவிடும். சகல நோய்களும் நிவாரணம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் தீரும். உடல் உற்சாகமாக இருக்கும். இதற்கு ஒரு இனிய கதை. அழகாபுரியின் மன்னன் குபேரன். சிவபக்தன். தவறாமல் சிவபூஜை செய்பவன். குபேரனின் பணியாளன் ஹேமமாலி. குபேரன் செய்யும் சிவ பூஜைக்கான மலர்களை பறித்து வந்து கொடுக்கும் பணியைச் செய்துவந்தான். ஒருநாள் வழக்கம்போல மலர் பறிக்கச் சென்றவன் உரிய நேரத்துக்குத் திரும்பவில்லை. நெடுநேரம் காத்திருந்த குபேரன், மலர் இல்லாததால் சிவபூஜை செய்யமுடியாமல் தவித்தான்.

கடுங்கோபம் கொண்டான்.“சிவபூஜை தடைப்படக் காரணமாக இருந்த ஹேமமாலியைத் தொழுநோய் தாக்கட்டும்.’’ என்று சாபமிட்டான். அடுத்த கணம், தொழுநோயால் பீடிக்கப்பட்டான் ஹேமமாலி. உடனே அவன் தன் மனைவியைப் பிரிந்து காடுகளில் சுற்றித்திரியத் தொடங்கினான். ஒருநாள் வனத்தில் அவன் மார்க்கண்டேய முனிவரைக் கண்டான். தனது நோய் காரணமாகத் தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அனைத்து உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்தும் மார்க்கண்டேய முனிவர், அவன் நிலையைக் கண்டு வருந்தினார்.

ஹேமமாலிக்கு “யோகினி ஏகாதசி’’ விரதத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அதைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார். ஹேமமாலி, யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான். கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் இன்றைய நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கிவந்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு உடலில் எந்த நோயும் அண்டாமல் நெடுநாள் வாழ அருள் கிடைக்கும்.

14.6.2023 – புதன்
கூர்ம ஜெயந்தி

இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகா விஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால், கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பாற்கடலில் இருந்த பல அரிய பொருட்களை தேவர்களுக்கும், மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும். ஆனிமாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீமன் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா தோன்றினார்.

அவர் உலகத்தைப் படைத்தார். “தான்தான் படைப்பாளி; தன்னால்தான் உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது’’ என்று அவர் நினைத்தார். அப்போது அவர் எதிரிலேயே ஒரு ஆமை தோன்றியது. அந்த ஆமையைப் பார்த்து “நீயும் என்னால் படைக்கப்பட்ட ஒரு உயிர்தான்’’ என்று பிரம்மன்கூற, அந்த ஆமை சிரித்தது. தன்னுடைய விஸ்வரூப தரிசனம் தரிசனத்தை பிரம்மாவுக்கு காட்ட, பிரம்மா கூர்மத்தை பலவாறு ஸ்தோத்திரம் செய்தார்.

“நீயே ஆதிபுருஷன். உலகைப் படைக்க வல்லவன் நீயே’’ என்று கூர்மாவதாரம் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் அத்தனை பேருமே கூர்ம அவதாரத்தைப் போற்றிப் பாடுகின்றனர். ஆண்டாள் திருப்பாவையில் நிறைவுப் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த மாதவனை’’ என்று திருப்பாற்கடலை கூர்மாவதாரம் எடுத்து கடைந்த செய்தியைப் பாடுகின்றார்.

கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோயில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். ஆனி மாதம் தேய்பிறை துவாதசியில் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அருகில் ஸ்ரீகூர்மம் என்கிற தேசத்தில் கூர்ம ஜெயந்தி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம், அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்ம ஜெயந்தியன்று அவர் தியான சுலோகத்தை பாட வேண்டும்.

ஓம் சங்கு சக்ர தரம் தேவம் சந்திர
மண்டலம் மத்யகம்
ஸ்ரீபூமி சகிதம் தேவம் கிரீடாதி விபூஷிதம்
ஸ்ரீவத்ஸ கௌஸ்து போரஸ்கம் வனமாலா விராஜிதம்
கதா பத்ம தரம் சாந்தம் கூர்ம கிரீவம் அஹம் பஜே

15.6.2023 – வியாழன்
கிருத்திகை விரதம்

பரணி நட்சத்திரம் முடிந்து கிருத்திகை நட்சத்திரம் துவங்கும் நாள். துவாதசி திதி முடிந்து திரயோதசி பிற்பகலில் ஆரம்பிக்கிறது. எனவே கிருத்திகை விரதத்தோடு பெருமாளை நினைத்துக்கொண்டு கூர்மஜெயந்தி விரதமும் இருந்து, மாலைநேரம் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, திருவிளக்கு போட்டு வரலாம். இதன் மூலம் எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். மரண பயம் அடியோடு நீங்கும். சகல நன்மைகளும் கிடைக்கும். இன்று குருவாரம்.

தேய் பிறையில் வரும் மகாபிரதோஷ நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. எல்லா சிவாலயங்களிலும் நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறும் வேளையில் கலந்துகொண்டு அபிஷேகம் தரிசிப்பதன் மூலமும், திருக்கோயில் வலம் வந்து சிவனை வணங்குவதன் மூலமும் எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். வைணவ சமயத்தில் பிரதோஷ வேளை நரசிம்மமூர்த்தி வழிபாட்டுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ வேளையில், பூஜை அறையில், ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, நரசிம்ம மூர்த்தியை உபாசனை செய்பவர்களுக்கு உடனடியாக அவருடைய அருள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் பூர்த்தியாகும்.

15.6.2023 – வியாழன்
கழற்சிங்க நாயனார் குருபூஜை

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் ஒரு குறுநில மன்னர். சிவ பக்தர். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் தரிசனம் செய்ய எண்ணினார். தமது மனைவி, பரிவாரங்களுடனும் திருவாரூரை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த அவர் மனைவி (அரசி) மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள்.

அங்கு தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவர் சினம்கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார். பட்டத்தரசி மயக்கமுற்று வீழ்ந்தாள்.

மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அரசியாரின் நிலையைக் கண்டார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணையாரிடம் எமது தேவியார் செய்த பிழை யாதோ? என்று விசாரித்த மன்னன் அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்பதை அறிந்து, “நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்க வில்லை” என்று கூறி மலரை எடுத்த அரசியாரின் மலர்க்கையை துண்டிக்க முனைய அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்க, அப்பொழுது மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, உமா மஹேசனாக இறைவன் ரிஷபத்தில் எழுந்தருளினார்.

பட்டத்தரிசியாரின் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். சேக்கிழார் பெருமான்,

“கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக்
கமழ்வாசப்பூத் தொட்டுமுன் னெடுத்த
கையாம் முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தாரன்றே.’’

என்று தனது பெரியபுராணத்தில் அழகுபட பாடியுள்ளார். கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. காஞ்சியில் ஏகம்பரேஸ்வரர் கோயிலில் இவருக்குத் தனி சந்நதி உண்டு.

16.6.2023 – வெள்ளி
ஆனிமாதப் பிறப்பு

இன்று ஆனிமாத பிறப்பு. ஆனிமாதம் என்பது உத்தராயன காலத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு மாலை நேரம். அதாவது, நான்கு முதல் ஆறுமணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில் எந்தப் பிரார்த்தனையைச் செய்தாலும் பலிக்கும். காரணம் இந்த நேரத்தில்தான் நாள் பிரதோஷ வேளை இருக்கிறது. மாதப் பிறப்பாக இருப்பதால் பிதுர் தேவதைகளை நினைப்பதும், குல தெய்வத்தை நினைப்பதும், இஷ்ட தெய்வத்தை நினைப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Karoda ,VISIONIZARA ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி