×
Saravana Stores

பரமக்குடியில் பளபளக்கும் சாலை, மின்விளக்கு அமைப்பு

*₹13.5 கோடியில் புதிய வாரச்சந்தை

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளை கொண்ட பெரிய நகராட்சியாக உள்ளது. 1964ம் ஆண்டு பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் ஆகிய இரு நகரங்களையும் இணைத்து நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒரு லட்சத்து பத்தாயிரம் மக்கள் தொகை, வருமானங்கள் மற்றும் வசதிகள் உள்ளதால் சிறப்பு நிலை பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.29 கோடி மதிப்பில் தூய்மை, சுகாதாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது.

பரமக்குடியில் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.11 கோடி செலவில் வைகை ஆற்றின் கரையோரத்தில் காட்டுபரமக்குடி முதல் காக்காதோப்பு வரையிலும், ஆற்றுப்பாலம் மேம்பாலம் முதல் ஜீவா நகர் வரையிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை ஓரங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை நிவர்த்தி செய்யும் விதத்தில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையிலான நகர்மன்ற உறுப்பினர்கள் முயற்சியில் 15வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் வைகை ஆற்றின் ஓரங்களில் மின் விளக்குகள் அலங்கரித்து வருகிறது.

மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 6 கோடி செலவில் தார்சாலை மற்றும் அலங்கார கற்கள் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி வாரச்சந்தை பகுதியில் பதிமூன்றரை கோடி செலவில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, பொருள்கள் வைக்கும் அறை என நவீன வசதிகளுடன் 25 கடைகள் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

நெசவாளர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் நகர்புற மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் ரூ.1.80 கோடி செலவில் புதிய எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 36 வார்டுகளிலும் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி கூறுகையில், பரமக்குடியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.20 கோடிக்கு மேல் பொது மக்களுக்கு அரசின் திட்டங்களும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பரமக்குடியில் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
பரமக்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி நகராட்சி பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் அடிப்படை வசதிகளை செய்ய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சி எல்லையுடன் சேர்ந்து தெளிச்சாத்த நல்லூர், வேந்தோணி, உரப்புளி உள்ளிட்ட கிராம ஊராட்சியில் உள்ள சில பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வார்டுகள் வாரியாக ஆய்வுக்கு சென்று குறைகள் சரி செய்யப்படுகிறது. வைகை ஆற்று பகுதியில் புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது என கூறினார்.

23வது வார்டு கவுன்சிலர் பாக்கியம் (மதிமுக) கூறுகையில், பரமக்குடி நகராட்சி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டுகளிலும் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.13.5 கோடியில் புதிய வாரச்சந்தை வருகிறது. பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிப்படைத் தேவைகளை முடிக்க வேண்டும் என்றார்.

நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்

நகர்ப்புறங்களில் சாலைகளில் தெரியும் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் விபத்துகளை தடுக்க வேண்டும். தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசு மகளிர் கல்லூரிக்கும் எம்ஜிஆர் நகர் பகுதிக்கும் இடையில் வைகை ஆற்றின் பிரதான கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும். ஓட்டப்பால முதல் ஐந்து முனை சாலை வரை உள்ள கழிவுநீர் கால்வாய் தூர் வரவேண்டும். ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்த பகுதியில் பொது கழிப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும்.

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வைகை ஆற்றின் கரையோரத்தில் நிரந்தர கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். நகராட்சி சார்பாக விளையாட்டை மேம்படுத்தும் விதமாக இன்டோர் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post பரமக்குடியில் பளபளக்கும் சாலை, மின்விளக்கு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakkudi ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம்: பரமக்குடி அருகே...