×

மாமல்லபுரம் அருகே கன மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை, இழப்பீடு வழங்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி, பட்டிப்புலம், பையனூர், சாவடி, கடம்பாடி, வடகடம்பாடி, மணமை, பெருமாளேரி, காட்டுதாங்கல், காரணை, நல்லான்பிள்ளை பெற்றாள், குச்சிக்காடு, நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம், எடையூர், ஆண்டிகுப்பம், கொய்யாதோப்பு, எச்சூர் பகுதியில் 700 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் நெல், நிலக்கடலை, காய்கறிகள் என விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் கதிர் வந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த ஒரு வாரமாக இரவில் பெய்து வரும் கன மழையால் விளைநிலங்களில் மழை வெள்ளம் தேங்கியதால் பல ஏக்கர் நெற்பயிர்கள் தரையோடு சாய்ந்து சேதமானது. இதனால், அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர்.

அறுவடை நேரத்தில் பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. இதனால், விவசாயிகளுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கி பயிர் செய்துள்ளனர். தற்போது, பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே கன மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை, இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...