×

பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாயி!

நன்றி குங்குமம் தோழி

ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்றைய காலக்கட்டத்திலும் பெரிதும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றான குலு என்கிற பகுதியின் பஞ்சார் துணைப்பிரிவில் உள்ள தலகாலி எனும் கடைக்கோடி கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயி அனிதா நேகி. இவர் சிறு விவசாயி என்பதில் தொடங்கி வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாகியுள்ளார்.

விவசாயத்தில் புதுமையான தொழில்நுட்பங்களை பின்பற்றி அசத்தி வரும் அனிதா பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்டவராக விளங்குகிறார். திருமணத்திற்கு பிறகு கடந்த 25 வருடங்களாக விவசாயம் செய்து வரும் அனிதா, “பூண்டு, பட்டாணி, முட்டைகோஸ், தக்காளி போன்றவற்றை பயிரிட்டு அறுவடை செய்தோம், அதற்கான லாபமும் நன்றாக இருந்தது.

ஆனால் நாங்க ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் அது எங்க நிலத்தின் வளத்தை படிப்படியாக அழிப்பதை உணர்ந்தோம். நுண்ணுயிர் வளர்ச்சி இல்லாதது மட்டுமின்றி என்சைம் செயல்பாடுகள் ஏதும் இல்லாததால் மண்ணின் ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருப்பது தெளிவாக தெரிந்தது. அதிகமான உள்ளீட்டு செலவுகளும், குறைவான உற்பத்தித்திறனும் பெரும் கவலையை கொடுத்தன” என்று விவசாயத்தில் தன் ஆரம்பகால அனுபவங்களை பகிர்கிறார்.

“மண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்ற கவலை 2018ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தால் மறைந்தது. அப்போது எங்க கிராமத்தில் வேளாண் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். விவசாய விஞ்ஞானிகள் குழு ரசாயனமற்ற விவசாயத்தை ஊக்குவிக்கும் PK3Y எனும் தொழில்நுட்பத்தை பற்றி கிராமத்திற்கு தெரியப்படுத்த வந்திருந்தனர். புதுமையான இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக இருந்தாலும், ஏற்கனவே நான் செய்யும் விவசாய முறையில் புது மாற்றத்தை ஏற்படுத்த சற்று தயக்கமாக இருந்தது.

எனவே ஆரம்பத்தில் என் கிச்சன் கார்டனில் ரசாயனமற்ற விவசாயத்தை மேற்கொண்டேன். ரசாயனங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தேன். மட்டுமின்றி ஊடுபயிர் நுட்பத்தையும் (inter-cropping) கடைபிடித்தேன். பூஜ்ஜிய உள்ளீட்டு செலவுகளுடன் இயற்கை விவசாயம் நல்ல பலனை கொடுத்தது. உடனே எனது மற்றொரு நிலத்தில் PK3Y தொழிநுட்பத்தை பயன்படுத்தினேன். பட்டாணி, தக்காளி, பூண்டு, கீரைகள், கொத்தமல்லி என எல்லாவற்றையும் பயிரிட்டேன்.

விளைச்சல் நன்றாக இருந்தது. நான் மட்டுமின்றி எங்க கிராமத்து விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தை கடைபிடிக்கும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து என்னுடைய அடுத்த தோட்டத்தில் ஆப்பிள், ப்ளம், பேரி, கிவி, மாதுளை போன்ற பழ வகைகளை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்து வருகிறேன்” என்கிற அனிதா, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 200 பெண் விவசாயிகளுக்கு ஊக்கமளித்து ஆதரித்து வருகிறார்.

தரிசு நிலங்களை லாபம் ஈட்டும் நிலமாக மாற்ற வழிகாட்டுகிறார். பள்ளி மாணவர்களுக்கும் இயற்கை விவசாயத்தை கற்பித்து வருகிறார். ரசாயனமற்ற இயற்கை விவசாயம் மூலம் வெற்றிகண்ட இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தன. தினமும் பெண் விவசாயிகள் பலர் இவரை சந்தித்து ரசாயனமற்ற விவசாய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்கின்றனர். இயற்கை விவசாயத்தை பலரிடம் கொண்டு செல்வது மட்டுமின்றி, சிறந்த தொழில்முனைவோராகவும் திறன்பெற்று விளங்குகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாயி! appeared first on Dinakaran.

Tags : Anita Negi ,Thalakodi ,Panjar ,Kullu ,Himachal Pradesh ,
× RELATED என்னை நானே சுயமாக செதிக்கிக் கொண்டேன்!