×

ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர்

தாம்பரம்: தாம்பரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கடந்த ஆண்டு ஜூலை 11ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது.

அதில், அதிமுக பொது குழுக்கூட்டத்தில் எடப்பாட்டி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், அதிமுக தலைமையை கைப்பற்ற நினைத்து பல்வேறு முயற்சியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கனவை எடப்பாடி பழனிச்சாமி தகர்த்தெறிந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திருச்சியில் பன்னீர்செல்வம் மாநாடு ஒன்றை நேற்று முன்தினம் நடத்தினார்.இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் வருவார்கள் என பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில் யாரும் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் முழுவதும் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் அதன் செயலாளர் புருஷோத்தமன் பன்னீர்செல்வத்தை சீண்டும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

அதில், நாய் அழுதாலும் நரி ஊளையிட்டாலும், இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே, நாங்கள் கண்ட புரட்சித் தலைவரே என பதிவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் படங்கள் அதில் இடம்பெற்று இருந்தது. திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்ற நிலையில் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : OPS ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...