×

ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: குறைந்த பட்ச வெப்ப நிலை 5 டிகிரி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத் துவங்கும். இந்த ஆண்டு கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம் மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான உறைபனி விழுந்தது. குறிப்பாக நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் மற்றும் கிளன் மார்க்கென் போன்ற பகுதிகளில் லேசான உறைபனி விழுந்தது.

ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்தது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இதனால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். உறைபனி விழத் துவங்கியுள்ளதால், பனியிலிருந்து தேயிலை செடிகள் மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். கூட்டு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்கவும் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: குறைந்த பட்ச வெப்ப நிலை 5 டிகிரி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...