ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை என 15 வார்டுகளில் உள்ள வீடு மற்றும் கடைகளில் சேரும் குப்பைகள் அனைத்தும் பேரூராட்சி சார்பில் தினமும் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு சேரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் நவீன குப்பை லாரிகள் (தானியங்கி) மூலம் எடுத்து செல்கின்றன. இந்தநிலையில் கடந்த ஒன்றரை வருடத்துக்கு ஒரு குப்பை லாரி பழுதானது. இதையடுத்து அந்த லாரியை பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பூங்கா அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மற்றொரு குப்பை அள்ளும் மினி லாரியும் பழுதானது இதையும் அந்த பகுதியில் நிறுத்தியுள்ளனர். இதனால் அந்த இரண்டு வாகனங்களும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஓட்டையான டிராக்டரில்தான் குப்பைகளை எடுத்துச் செல்லும்போது ஓட்டை வழியாக குப்பைகள் வெளியே கொட்டுகிறது. கடந்த மாதம் குப்பைகளை எடுக்க புதிதாக 4 பேட்டரி ஆட்டோக்கள் அரசு வழங்கியது. ஆனால் அந்த வாகனத்தை பயன்படுத்தாமலே வைத்துள்ளனர். எனவே குப்பை அள்ளும் லாரிகளை சீரமைக்க வேண்டும், புதிய பேட்டரி ஆட்டோக்களை விரைவில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குப்பை அள்ள புதிய பேட்டரி வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.