×

ஒரு கப் மொரிங்கா டீ… ஆரோக்கியத்திற்கு கியாரண்டி!

நன்றி குங்குமம் தோழி

டீ என்றாலே உயிரை கொடுப்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை டீ என்றாலும் அலுக்காமல் குடிப்பார்கள். அதிகமாக டீயை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் அறிவுரை கூறினாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 6-7 டீ வரை குடிப்பவர்களும் உள்ளனர். சுவையான டீக் கடைகளை தேடிப் போய் அருந்துபவர்களும் உண்டு. டீ குடிச்சா ஒரு உற்சாகம் ஏற்படும். அதில் மாற்றமில்லை.

அந்த உற்சாகத்தை ஆரோக்கிய முறையில் அளித்து வருகிறார் பரமேஸ்வரி. ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரும்புச் சத்து மற்றும் பிற சத்துகளை உடலுக்கு அளிக்கவும் ஓர் எளிய வகை முயற்சியாக துவங்கியதுதான் இந்த முருங்கை டீ (Moringa Tea). வெறும் முருங்கை இலை மட்டும் வைத்தும், மேலும் அதில் சுவைக்காக சில பொருட்களை சேர்த்து அதனை ஆரோக்கிய டீயாக தயாரித்து இந்தியா மட்டும் அல்லாது பிற நாடுகளிலும் தனக்கென தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார் தென்காசி, ஆழ்வார்குறிச்சியை சார்ந்த பரமேஸ்வரி மற்றும் அவரின் குடும்பத்தினர்.

‘‘எங்களுடையது ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு சின்ன கிராமம் தான். எங்க அப்பா வீட்டிலும் சரி என் கணவருடைய வீட்டிலும் சரி விவசாயம் தான் முதன்மைத் தொழில். எனக்கும் விவசாயம் மற்றும் இயற்கை பொருட்களின் மேல் தனி ஈடுபாடு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவியாக நாமும் இந்த துறையில் ஏதேனும் செய்யலாம் என ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது’’ என்ற பரமேஸ்வரிக்கு எவ்வாறு முருங்கை இலையில் டீ தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது என்பதனை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘பொதுவாக தென் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக காணப்படும் ஒரு வகை மரம் என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கை பெண்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக ரத்தசோகையை கட்டுப்படுத்தும் வல்லமைக் கொண்டது. அதை கீரையாக கொடுத்தால் பலர் அதை சாப்பிட விரும்புவதில்லை, குழந்தைகள் உட்பட. இவ்வாறு பல வளம் நிறைந்த அந்த கீரையைக் கொண்டு இயற்கையான முறையில் ஒரு உணவுப் பொருளை தயாரிக்கலாம் என எண்ணம் வந்தது.

முதலில் பொடி தயாரிக்க முடிவு செய்து பின் ஏன் முருங்கை இலையில் தேநீர் தயாரிக்கக்கூடாது என தோன்றியது. அதன் ஆரம்பம் நான் வீட்டிலேயே சிறிதளவு முருங்கை இலைகளை நன்கு நிழலில் உலர்த்தி மிக்சரில் போட்டு தேயிலை பதத்திற்கு கொண்டு வந்தேன். அதனை வைத்து எனது வீட்டில் இருந்தவர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுத்தேன். அதனை ருசி பார்த்த எனது குடும்பத்தினர், இதில் வெறும் முருங்கையின் சுவை மட்டுமே உள்ளது.

அதனால் அதில் வேறு ஏதேனும் சுவைகளை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். சாதாரண டீக்களில் பல சுவைகள் இருக்கு. ஏலக்காய், இஞ்சி, எலுமிச்சை, தேன்… இது போல, நானும் இந்த முருங்கை டீயில் பல சுவைகளை சேர்க்கலாம்னு முடிவு செய்தேன். அதாவது ஏலக்காய், இலவங்கப்பட்டை, எலுமிச்சை, இஞ்சி, செம்பருத்தி, புதினா, நெல்லி, அஸ்வகந்தா, துளசி இது போல 12 வகையான சுவைகளை சேர்த்தேன்.

ஒவ்வொரு ஃபிளேவர்களையும், என் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல், என் கணவரின் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் முருங்கை தேநீரை கொடுத்தோம். அவர்கள் அனைவரும் அனைத்து சுவைகளும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். அதன் பிறகு முழு மூச்சாக இதை தயாரிக்க முடிவு செய்தேன். ஆரம்பத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தான் முருங்கை மரங்களை விளைவித்து வந்தேன். தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவில் விளைவித்து வருகிறோம். மேலும் ஆரம்பத்தில் நான் இதனை பிசினசாக மாற்றும் முன் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் தயாரித்து வந்ததால், அவ்வப்போது தேவைப்படும் போது தயாரித்துக் கொள்வேன்.

ஆனால் இதனை பிசினசாக மாற்றிய பிறகு, அதற்கான இயந்திரங்களை கொண்டு தயாரிக்க ஆரம்பத்தேன்’’ என்றவர் முருங்கை டீயினை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல் அதற்கான பலன்களையும் விளக்குகிறார். ‘‘டீயை பொறுத்தவரை டீ பேக் வடிவத்தில் வருவதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை எளிதில் தயாரித்துக் கொள்ளலாம்.

அதாவது ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் டீ பேக்கினை முக்கி எடுத்தால் டீ தயார். இயற்கையில் முருங்கை கீரை சற்று துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும், சிறியவர்களுக்கு இதன் சுவை அவ்வளவாக பிடிக்காது. அவர்களுக்கு முருங்கை டீயுடன் சிறிதளவு தேன் சேர்த்து தரலாம். பெரியவர்கள் அதன் கசப்பு தன்மையுடன் எடுத்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் இருக்கும் இரும்புச் சத்து அவர்களின் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுவதோடு பல உடல் சார்ந்த நோய்களுக்கு தீர்வாக அமையும். மேலும் இதனுடன் சுவைக்காக சேர்க்கப்படும் மற்ற பொருட்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணமுடையது. இந்த முருங்கை டீயில் 40% முருங்கையும், 60% பிற இஞ்சி, செம்பருத்தி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, எலுமிச்சை போன்ற 12 சுவைகளும் கலந்து இருக்கும். பொதுவாக தினமும் முருங்கை கீரை சமைப்பது, உணவோடு எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், நடைமுறையில் அது சாத்தியமற்றது.

ஆனால் தினமும் இதனை டீயாக குடிப்பதால் இதில் இருக்கும் இரும்புச்சத்துடன் மற்ற பொருட்களின் சத்துகளும் சேர்ந்து நமக்கு கிடைக்கும். ஊரில் தான் அனைத்து பொருட்களையும் தயாரித்து வருகிறோம். அதே சமயம் சென்னை தாம்பரத்தில், எங்க நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு இங்கிருந்துதான் எங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இதனை என் கணவரும் என் மாமனாரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் தயாரிக்கும் முருங்கை டீயினை தமிழ்நாடு, இந்தியா மட்டும் இல்லாமல் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். முருங்கை இலை கொண்டு தேநீர் மட்டுமில்லாமல், இலை மற்றும் அதன் விதைகளை பயன்படுத்தி சூப் தயாரிப்பதற்கு பொடியும் தலைமுடி மற்றும் குளியலுக்கு பயன்படுத்தக் கூடிய எண்ணையும் தயாரிக்கிறோம். இதைத் தவிர சோப், பேஸ் வாஷ், பாடி வாஷ், ஷாம்புவும் தயாரித்து அதனையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். முருங்கை டீயினை தற்போது, டிப் டீயாக தான் விற்பனை செய்து வருகிறோம்.

கூடிய விரைவில் இதனை இலை வடிவத்திலும் வழங்கும் திட்டம் உள்ளது. என் வீட்டில் உள்ளவர்களுக்காக தயாரிக்க ஆரம்பித்ததை ஒரு தொழிலாக மாற்றி அமைக்க சொல்லி என்னை ஊக்கப்படுத்தியது என் குடும்பத்தினர்தான். நாங்க விவசாயம் குடும்பம் என்பதால், எனக்கும் அதன் மேல் இருந்த தனிப்பட்ட ஈடுபாடுதான் இந்த முருங்கை டீ’’ என்றார் பரமேஸ்வரி.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ஒரு கப் மொரிங்கா டீ… ஆரோக்கியத்திற்கு கியாரண்டி! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பெண் தொழில்முனைவோர்களை வழிநடத்தும் பிஸ் லேடி!