×

ஓஎம்ஆரில் அனுமதியின்றி ராட்சத விளம்பர பேனர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என வளர்ச்சியடைந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களை கவர்வதற்காக பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் ராட்சத பேனர்களை நிறுவுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் ராட்சத பேனர்களுக்கு அரசு அனுமதியை நிறுவனங்கள் பெறுவதில்லை. உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்தவேண்டிய வரியையும் செலுத்துவதில்லை.

இதுமட்டுமின்றி ஒருமுறை நிறுவப்படும் ராட்சத பேனர்களுக்கான இரும்பு கம்பங்களை விளம்பர நிறுவனங்கள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் ராட்சத பேனர்களின் கம்பங்கள் துருபிடித்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பலத்த காற்று வீசும்போது ராட்சத கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள பேனர்கள் கிழிந்து கீழே விழுந்து மின் வயர்களை அறுத்துவிடுகின்றன. சில பேனர்கள் வாகன ஓட்டிகளின் மீது விழுந்து விபத்தை ஏற் படுத்துகின்றன. நேற்று செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, கேளம்பாக்கம் அருகே தையூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் கிழிந்து குடியிருப்பு பகுதியின் மின் கம்பங்கள் மீது விழுந்தது.

அழுத்தம் தாளாமல் 3 மின் கம்பங்கள் சரிந்து மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது. இதையடுத்து, மின் வாரிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்வையிட்டு மாற்று வழியில் மின்சாரம் வழங்கினர். ஆனால், சாய்ந்த மின் கம்பங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த பிரச்னைக்கு காரணமாக ராட்சத விளம்பர பேனர்தான் என மின்வாரிய நிர்வாகமும், குடியிருப்புவாசிகளும் தெரிவிக்கின்றனர். எனவே, ராட்சத விளம்பர பேனர் அமைப்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

The post ஓஎம்ஆரில் அனுமதியின்றி ராட்சத விளம்பர பேனர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OMR ,Thiruporur ,Old Mamallapuram Road ,OMR Road… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...