×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று 2வதுநாளாக 4ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 2ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 4ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் குடகுமலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83 அடியை தொட்டுள்ளது. இதேபோல் 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. இரு அணைகளில் இருந்தும் சுமார் 4ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 1,281 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,465 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 39.70 அடியாக இருந்து நீர்மட்டம், இன்று 39.76 அடியாக சற்று உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 11.96 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanakal caviar ,Okanakal Caviri ,Karnataka ,Okanakal ,Matur Dam ,Kaviri Reservoir ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு