×

மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் வெற்றிட உணர்வு!

இன்றைய செய்திகளில் ஒருசில பெண்கள் தங்கள் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றுகிறார்கள் அல்லது கணவரை கொலை செய்கிறார்கள் அல்லது கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் போன்ற செய்திகளை அனைவரது கண்களிலும் படுகிற மாதிரி அல்லது படிக்கின்ற மாதிரி காட்சி ஊடகங்கள் வழியாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகவோ குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறோம். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்கிற சொல்லாடல்கள் மூலம், பெண்களின் எண்ணங்களுக்குள் இம்மாதிரியான எதிர்மறை எண்ணங்கள் குடும்ப உறவுகளுக்குள் எப்படி நுழைய ஆரம்பித்தது என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இவை அனைத்துக்கும் காரணம், பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் மற்றும் அவர்களுக்கு கிடைத்த பொருளாதார ஈட்டல் என்றும், இவை இரண்டுமே பெண்களை அவர்களின் குடும்ப உறவுகளை எதிர்க்குமளவிற்கும், கொலை முயற்சியில் ஈடுபட வைக்கும்அளவிற்கும் கொண்டு செல்கிறது என்றொரு வாதமும் நடைபெற்று வருகிறது.நம் நாட்டில் பெண்களின் எண்ணங்களுக்கு உண்மையில் மிகப்பெரிய மரியாதையும், கவுரவமும், பயமும் இருக்கிறது.

உதாரணத்திற்கு, பழைய சொல்லாடல்தான் என்றாலும், ‘‘சுமங்கலிப் பெண்ணை அழவைக்கக் கூடாது, கர்ப்பிணி பெண்ணை மனம் நோக வைக்கக் கூடாது” என்று பலரும் இன்று வரை தொடர்ந்து கூறுகிறார்கள். இதன் உள்ளர்த்தம் என்னவெனில், பெண்களின் எண்ணங்களை வெளிப்படையாக பேசுவதற்கும், அவர்கள் விரும்பிய செயலைச் செய்வதற்கும் இலகுவான ஒரு சூழ்நிலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும்.

நவீன டிஜிட்டல் உலகில், இந்தியாவில் என்னதான் குடும்ப அமைப்பு முக்கியமென்றும், கலாச்சாரம் முக்கியமென்றும் பேசினாலும், தனிக்குடித்தனம் என்று வரும் போது, ஒட்டுமொத்த பாரமும் அந்தக் குடும்பத்து பெண்கள் மீது திணிக்கப்படுகிறது. குடும்பம் என்கிற பெயரில், குடும்ப உறவு என்கிற பந்தத்தின் பெயரில் எத்தனை அழுத்தம் கொடுத்தாலும், அதை அந்தப் பெண் தாங்க வேண்டுமென்று அவளது எண்ணங்களுக்குள் தொடர்ந்து சொல்லப்படுகிறது.

பெண்ணின் மனம் என்ன மாதிரி இயங்குகிறது என்பதை, உலகளவில் பல விருதுகளைப் பெற்ற Poor Things என்கிற நாவலை, 1992ல் ஆலாச்டிர் கிரே என்பவர் எழுதினார். அந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதாவது, ஒரு ஆண் விஞ்ஞானி இறந்து போன ஒரு பெண்ணை உயிர்ப்பிக்கிறார். அந்தப் பெண்ணின் மூளையை அறுவை சிகிச்சை செய்து உயிர்ப்பிக்க செய்வார். அதன்பின் அந்த பெண்ணின் நடவடிக்கைகள் பற்றியதை ஒட்டு மொத்த திரைப்படமும் பேசுகிறது.

பெண்களின் எண்ணங்கள் என்றைக்குமே மிகவும் சுதந்திரமானது. இந்தத் திரைப்படத்தில் அந்த பெண் தன்னை உயிர்ப்பிக்கச் செய்த விஞ்ஞானி சொல்வதை கேட்க மாட்டாள். அப்போது அவர் கூறுவார், ஆண்களின் மனதிலுள்ள அறிவியலைத்தான் திணித்து உயிர்ப்பிக்க வைத்தோம். ஆணின் பார்வையிலுள்ள அறிவியலுக்கு முன் அவளது எண்ணங்கள் சமாதானமடையாது என்பதை நாம் மறந்துவிட்டோம். அவள் அதை மீறத்தான் செய்வாள் என்பார்.

உண்மையில் பெண்களின் எண்ணங்களுக்கு என்றுமே மிகப்பெரிய சுதந்திர வெளி தேவைப்படுகிறது. அந்தச் சுதந்திர சிந்தனைகள் மூலம்தான், நாம் நம் நாட்டிலுள்ள தத்துவம், கலாச்சாரம், ஆன்மீகம் அனைத்தையும் பெண்களின் குரலின் வழியே பரப்புகிறோம். அதில் மிக முக்கியமாக பெண்களுக்கு ஒவ்வாத ஒரு உணர்வு எதுவென்றால், குற்ற உணர்வுதான். அந்த குற்ற உணர்வை தன் மீது வரவிடாத அளவிற்கு அவளது செயல்கள் அனைத்தும் தெளிந்த நீரோடையாக இருக்கும். இன்றைக்கு பல குடும்பங்களில் பெண்களை தங்கள் சொல்படி நடக்க வைப்பதற்கு, அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக எது இருக்குமென்றால், குற்ற உணர்வுதான்.

“நம் குடும்பத்துக்காக நீ இதைச் செய்யவில்லை. குடும்ப மானத்தை வாங்கிட்ட… கணவர், குழந்தையை கொஞ்சங்கூட கவனிக்கலை” எனத் தொடர்ந்து மனதளவில் அவர்களைத் தடுமாற வைக்க, குற்ற உணர்வை ஆயுதமாக்கி பயன்படுத்துவார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத விஷயம், பெண் இன வர்க்கத்திடம் குற்ற உணர்வை தொடர்ந்து சொல்லும் போது, ஒரு நொடியில் அவர்கள் அதைத் தகர்த்து எறிந்துவிடுவார்கள். ஏனெனில், இயல்பிலேயே பெண்களால் எந்தளவிற்கு குடும்பத்தை கவனிக்க முடியுமோ, அந்த அளவிற்கு கவனத்தை குடும்பத்தின் மீதும் வைக்க முடியும்.

கட்டாயமாக வைப்பார்கள். அதையும் மீறி இந்தச் சமூகம் பெண்களை நிலைகுலைய வைக்கிறது. இதையும் மீறி, அவர்களின் இயல்பான சுதந்திரத் தன்மைக்குத் தங்களைப் பெண்கள் தகவமைத்துக் கொள்வார்கள். அதனால்தான், இன்றும் குடும்ப உறவுகளின் துணையின்றியே, பெண்கள் தனியாகக் குழந்தைகளையும் வளர்த்து, தங்களையும் மீட்டெடுக்கிறார்கள். நவீன டிஜிட்டல் உலகில் வாழுகிற பெண்களிடம், பழைய முற்போக்கு எண்ணங்களுடன் குடும்ப உறவுகள் சில, பெண்ணிற்கு நெருக்கடிகளை கொடுக்கும்போது, அவர்களின் எண்ணங்களை நிதானமாக்குவதற்கு, சரியான மனித பலத்தின் துணையில்லாமலே, அதீத வீரியத்துக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அதன்பின் வரும் விளைவுகள் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

இன்றைய உலகில் பெண்களின் எண்ணங்களுக்கு நிதானத்தை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்று… நெருக்கடி சமயங்களில் மனித உறவுகளின் பலம் அவர்களுக்கு மிக அருகில் இருந்தாலே, தங்களின் வீரியமான எண்ணங்களை அவர்களால் நிதானமாக்க முடியும்.பெண்கள் அவர்களின் சிந்தனையால் கெட்டுப்போகவில்லை, மாறாக அவர்களின் சிந்தனையை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்கள் இல்லாத சூழலில், நிலைகுலைந்து போகிறார்கள். அந்த வெற்றிடத்தை நீக்குவதே இன்றைய தார்மீக கடமையாக நம் சமூகத்துக்கு இருக்கிறது.

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முழங்கால் மூட்டு வலி காரணமும் தீர்வும்!