×
Saravana Stores

ராகுல் காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி

  • பாஜவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு ஒன்றாகச் செயல்படுவோம் என அறிவிப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என நிதிஷ்குமார்,தேஜஸ்வியை சந்தித்த பின் ராகுல் காந்தி கூறினார். அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே அணியாக போட்டியிடச்செய்வதற்கான நடவடிக்கையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக டெல்லி சென்ற அவர் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார். கூட்டத்திற்குப் பின் அனைத்து தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. பல விஷயங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் கலந்துரையாடினோம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, வரவிருக்கும் தேர்தலில் ஒற்றுமையாக போராட அனைவரும் முடிவு செய்துள்ளோம்” என்றார். நிதிஷ்குமார் பேசுகையில்,‘‘ முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக செயல்பட இருக்கிறோம்’’ என்றார். பின்னர் பேசிய ராகுல்காந்தி, ”இது எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி. நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளோம். இந்திய நாட்டிற்கான ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொண்டுள்ளோம்” என்றார்.

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுலுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் பேட்டி அளித்த கெஜ்ரிவால், ‘‘நாடு மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. எனவே, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நாடும் ஒன்றிணைந்து ஒன்றியத்தில் ஆட்சியை மாற்றுவது மிகவும் அவசியம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது. நான் அவருடன் முழுமையாக இருக்கிறேன்’’ என ஆதரவு தெரிவித்துள்ளார்.

The post ராகுல் காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Rahul Gandhi ,New Delhi ,Tejashwi ,Dinakaran ,
× RELATED தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்...