×

நீலகிரி வரையாடு திட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக ‘நீலகிரி வரையாடு’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார்.

‘வரையாடு’ என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் ‘நீலகிரி வரையாடு’ என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நீலகிரி வரையாடு’ உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம்ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல், வரையாடுகளின் வரம்பு முழுவதும் தரப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்துதல், நீலகிரி வரையாட்டினை மறு அறிமுகம் செய்தல் மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட வரையாடுகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், பணியாளர்களுக்கு கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், மேல் பவானியில் உள்ள சோலா புல்வெளியில் முன்னோடியான மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளுதல், சூழல் – சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் எல்லை போன்றவை குறித்த முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.

நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த திட்ட அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு முழு நேர முதல் திட்ட இயக்குனரையும் அரசு நியமித்து ஆணை வெளியிட்டு, பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு மூத்த விஞ்ஞானியையும் நியமனம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியன், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த பிரவீன் சண்முகானந்தம் மற்றும் தனுபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி வரையாடு திட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nilgiri Draft Project ,Chief Minister ,M.K. Stalin ,CHENNAI ,Chief Secretariat ,Nilgiris ,Dinakaran ,
× RELATED விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க...