×

அருமனை அருகே இரவு காவலுக்கு சென்று மாடுகள் திருடிய கூர்கா சிக்கினார்: கிராம மக்கள் போலீசில் ஒப்படைப்பு

அருமனை: அருமனை அருகே இரவு காவலுக்கு சென்றபோது மாடுகளை திருடிய நேபால் நாட்டை சேர்ந்த கூர்காவை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அருமனை அருகே படப்பச்சை பகுதியை சேர்ந்தவர் ராஜன். விவசாயி. 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை வீட்டின் வெளிப்பகுதியில் கட்டுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மாடுகளை வீட்டின் வெளியில் கட்டி இருந்தார். அப்போது இரவில் அந்த வழியாக சைக்கிளில் வந்த கூர்கா ஒருவர் மாடுகளை திருட நினைத்தார்.

இதற்காக அவர் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள தனியார் பார் அருகே நிறுத்திவிட்டு 2 மாடுகளின் கயிற்றையும் அவிழ்த்து கொண்டு இருந்தார். பின்னர் மாடுகளை தான் வசிக்கும் திற்பரப்பு அருகே கிளாத்தூரில் உள்ள வாடகை வீட்டின் அருகே கட்டிவிட்டு சைக்கிளை எடுப்பதற்காக வந்தார். இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.

இந்தநிலையில் கூர்கா மீண்டும் நடந்து வருவதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். ராஜனும் மாடுகள் காணாததை அறிந்து பல்வேறு இடங்களில் தேடினார். இதையடுத்து மாடு திருடியதை பார்த்தவர்கள் கூர்கா தான் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ராஜன் கிராம மக்களின் உதவியுடன் கூர்காவை கையும் களவுமாக பிடித்து கிளாத்தூருக்கு சென்று 2 மாடுகளையும் மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட கூர்காவை அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கூர்காவிடம் விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர் நேபால் நாட்டை சேர்ந்த நாராயணசிங் (35) என்பதும், கடந்த 3 மாதமாக அருமனை பகுதியில் கூர்கா வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு வேளையில் காவல் பணிக்கு செல்லும் கூர்காவே மாடுகளை திருடிய சம்பவம் அருமனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அருமனை அருகே இரவு காவலுக்கு சென்று மாடுகள் திருடிய கூர்கா சிக்கினார்: கிராம மக்கள் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Gurkha ,Aruman ,NEPAL ,Rajan ,Padapachai ,Arumana ,Dinakaran ,
× RELATED நேபாளம் நாட்டில் அதிகாலை 3.59 மணிக்கு மிதமான நிலநடுக்கம்