×

ஷட்டர் பழுதடைந்ததால் குண்டாற்றில் இருந்து வீணாகும் தண்ணீர்

கமுதி, நவ.23: கமுதி குண்டாற்றில் ஷட்டர் பழுதடைந்ததால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை சீரமைப்பதோடு, கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வைகையாற்றில் இருந்து திருச்சுழி வழியாக பிரிந்து வரும் கிளை ஆறுதான், குண்டாறு. கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு இந்த ஆறு மட்டும்தான் ஆதாரம். கமுதி வழியாக செல்லும் இந்த ஆற்றில், பெரிய அணைக்கட்டு உள்ளது. இதன் மூலம் முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடிக்கு இரண்டாக பிரித்து விடப்படுகிறது. சாயல்குடி பகுதிக்கு செல்லும் இந்த ஆறு மலட்டாறு என்று அழைக்கப்படுகிறது.

இந்த மலட்டாறு மூக்கையூர் கடல் வரை செல்கிறது. அதிகமாக தண்ணீர் வரும் காலங்களில், முறையாக பாதுகாக்க வழியில்லாமல் அனைத்து தண்ணீரும் கடலில் வீணாக கலக்கிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு மழை காலங்களில் வரும் தண்ணீர் 6 மாதம் தேக்கப்பட்டு நிலத்தடி நீரை உயரச் செய்தனர். ஆனால் தற்போது அணைக்கட்டில் உள்ள பெரிய ஷட்டர் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல், மதகுகள் உடைந்து, திருகுகள் துருப்பிடித்து காணப்படுகிறது. கோடை காலங்களில் முறையாக பராமரிப்பு செய்தால், மழைக்காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர் அதிகரிக்கச் செய்யலாம். ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குண்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சேமித்து வைப்பதற்கு ஷட்டரை சீரமைக்காததால், தண்ணீர் முழுவதும் வீணாக கடலுக்கு செல்கிறது. பொதுப்பணி துறையினர் மணல் மூட்டைகளை கொண்டு, தண்ணீர் வெளியேறாமல் அடைத்து வருகின்றனர். இது நிரந்தர தீர்வை தராது.
மேலும் குண்டாறு வருடக்கணக்கில் தூர்வாரப்படாமல், கருவேல மரங்களால் அடர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மணல் முழுவதும் அள்ளப்பட்டு கட்டாந்தரையாக இருக்கிறது. வரும் மழைநீரை கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. எனவே கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரி பெரிய ஷட்டரில் உள்ள மதகுகள் பராமரிக்கப்பட்டால், மழைநீரை தேக்கி வைக்கலாம். இல்லை என்றால் வரும் காலங்களில் குண்டாறு என்ற ஆறு கமுதியில் ஓடியது என்றும், தற்போது தடம் தெரியாமல் மறைந்து விட்டது என்ற நிலை உருவாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : vent ,
× RELATED பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 4 பவுன் நகை துணிகர பறிப்பு