×

விவசாய நிலத்தில் காட்டுமாடு சாவு

ஊட்டி, நவ. 21: ஊட்டி மிஷினரிஹில் பகுதியில் விவசாய நிலத்தில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு உயிரிழந்து கிடந்தது. மின்சாரம் தாக்கி இறந்ததா? என வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. ஊட்டி நகரை ஒட்டி அமைந்துள்ள தொட்டபெட்டா, டைகர்ஹில் வனப்பகுதிகளில் காட்டுமாடுகள் அதிகமாக உள்ளன.
இவை அவ்வப்போது ஊட்டி நகருக்கும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் விசிட் அடிப்பது வழக்கம். இந்நிலையில் ஊட்டி அருகே பழைய உதகை, மிஷினரி ஹில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுமாடு ஒன்று இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து சம்பவயிடத்துக்கு நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் மற்றும் வனத்துறையினர் சென்று இறந்த காட்டுமாட்டின் உடலை பார்வையிட்டனர். இதில் காட்டு மாடு விவசாய நிலத்தின் ஒரத்தில் உள்ள வேலியின் மீது விழுந்து இறந்து கிடந்தது. இது ஆண் காட்டுமாடு என்பதும், 10 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின் உடல் புைதக்கப்பட்டது
.
அதன் உடலில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அடையாளம் உள்ளது. வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் விவசாய நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ராஜேந்திரன் என்பவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் கூறுகையில், ஊட்டி மிஷினரிஹில் பகுதியில் விவசாய நிலத்தில் காட்டுமாடு இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. மின்வேலியில் சிக்கி இறந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உரிய காரணம் தெரியவரும், என்றார்.

Tags : Death ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!