உதயநிதி கைது கண்டித்து தி.மு.க.வினர் மறியல்

கோவை, நவ. 21: தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தி.மு.க.வினர் நேற்று மாலை பல்வேறு இடங்களில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். கோவை காந்திபுரம் அண்ணா சிலை அருகே, மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கார்த்திக் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் நாச்சிமுத்து, மு.ரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், கண்ணன், ஆனந்தன், மு.மா.ச.முருகன், ராஜராஜேஸ்வரி உள்பட 400 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் தி.மு.க.வினர் கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை சரவணம்பட்டி ஜங்ஷனில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பையா கவுண்டர், பூபதி உள்பட 350க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகே  வடவள்ளி பகுதி தி.மு.க. செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட  தி.மு.க.வினர் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சண்முகசுந்தரம் உள்பட மாவட்ட  பொறுப்பு குழு உறுப்பினர் வடவள்ளி துரைசாமி, மகாலட்சுமி, கார்த்திகேயன், அழகுராஜா,  வேலுசாமி, தம்பு, பாபு, தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கோவை குனியமுத்தூர் பாலக்காடு சாலையில் பகுதி செயலாளர் குனியமுத்தூர் லோகு தலைைமயில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினருமான குறிச்சி பிரபாகரன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் கார்த்திகேயன், எஸ்.ஏ.காதர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூரில் நடந்த மறியல் போராட்டத்தில் எஸ்.எம்.சாமி, சிங்கை சிவா, உமா மகேஸ்வரி, குமரேசன், வெங்கடேசன் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மாநகரில் நேற்று ஒரே நாளில், கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சூலூர்: திருக்குவளையில் தேர்தல்  பிரச்சாரத்தை துவங்கிய  உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சூலூர் தி.மு.க. சார்பில்  நீலாம்பூர்-கொச்சின் பைபாஸ் சாலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சன் ராஜேந்திரன் புறநகர்  மாவட்ட பொறுப்பாளர் கபிலன் சூலூர்   பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெகநாதன்,  இருகூர் நகர பொறுப்பாளர் மணி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூலூர் கலங்கல் சந்திப்பில் சூலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும்  தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மேற்கு ஒன்றிய  பொறுப்பாளர் மன்னவன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், நகர  செயலாளர் சோலை கணேஷ், கண்ணம்பாளையம் நகர செயலாளர் சண்முகம்  ஆகியோர்  தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும்  கைது செய்து போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.  தி.மு.க.வினரின் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. அன்னூர் : தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து  கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் பஸ் நிலையம் முன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், 5 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கோவில்பாளையம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Related Stories:

>