திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் சேதம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் சேதம் அடைந்து உள்ளதால் பக்தர்கள் தவிக்கின்றனர். அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  இந்த கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழா, திருப்படி திருவிழா மற்றும் சஷ்டி விழா, சித்திரை மாசி பிரமோற்சவம் மிகவும் பிரபலமானது. தினமும் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சாமிதரிசனம் செய்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் சில பக்தர்கள், கோயில் விடுதியில் தங்கியிருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் மற்றும் தணிகை இல்லங்களில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்குகின்றனர். தற்போது இந்த கட்டிடம் முறையாக பராமரிப்பின்றி சேதம் அடைந்து வருகிறது. கட்டிடங்களில் மேற்கூரைகள் உடைந்து காணப்படுகிறது. கழிவறைகள் சேதம் அடைந்துள்ளதுடன் சுத்தமாக இல்லை. கதவுகள் உடைந்து தொங்குகிறது. மின்விளக்குகள் மற்றும் ஏசி ஆகியவறை பயன்படுத்த முடியாமல் உள்ளது.

மலைக்கோயிலுக்கு பின்புறம் இருபாலருக்கான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளுக்கு கதவுகள் இல்லாததால் பக்தர்கள் செல்வதற்கு கூச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள், கழிவறைகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகின்றனர். இவைகளை முறையாக பராமரிக்கவேண்டிய கோயில் நிர்வாம் கண்டுகொள்ளாமல் உள்ளதுதான் வேதனையின் உச்சம். இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், ‘’ மின்விளக்கு வசதி முறையாக செய்யப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் வழிப்பறி நடக்கிறது. பல இடங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. எனவே கோயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்து அறநிலைத்துறையும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.  

Related Stories:

>