×

நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் மருமகள் டெல்லியில் கைது : சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க முடிவு

சென்னை: நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவி, மகனை சுட்டுக் கொன்ற வழக்கில் மருமகள் உள்பட 3 பேரை போலீசார் டெல்லியில் கைது ெசய்தனர். சென்னை சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், இங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பைனான்சியர் உட்பட 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என தெரியவந்தது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியும், ஜெயமாலாவின் சகோதரருமான புனேவை சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), உத்தம் கமல் (28) ஆகியோர் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

விசாரணையில், குடும்ப தகராறு மற்றும் சொத்து பிரச்னை காரணமாகவும், ஜாதி ரீதியாக தாழ்த்திப் பேசியதாலும் தொழிலதிபர் குடும்பத்தை கொன்றதாக கைலாஷ் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், இவர்கள் 3 பேரையும் நேற்று காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, சகோதரி ஜெயமாலாவிற்கு அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்தோம், என கைலாஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்ததால், ஜெயமாலாவை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என கருதினர். எனவே, ஜெயமாலா உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், செல்போன் சிக்னலை வைத்து, டெல்லியில் பதுங்கி இருந்த ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை அம்மாநில போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை விமானம் மூலமாக சென்னை அழைத்து வந்து விசாணை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஜெயமாலாவிடம் நடத்தப்படும் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Daughter-in-law ,Delhi ,tycoon ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு