×

கிடப்பில் போடப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை

க.பரமத்தி, நவ. 12: மற்ற நல வாரியங்கள் செயல்படும் போது பூசாரிகள் வாரியம் மட்டும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் ஏன் என தெரியவில்லை. இனியாவது சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுமென பூசாரிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் முன்னேற்ற சங்க பொதுசெயலாளர் சதீஷ்கண்ணன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள பதிவு தபால் மனுவில் கூறியிருப்பதாவது: பூசாரிகள் நலவாரிய உறுப்பினராக பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் நலவாரிய அட்டையின் பதவி காலம் ஒரிரு ஆண்டுகள் முடிந்தும் இந்து சமய அறநிலைய துறையில் இருந்து நலவாரிய அட்டையை புதுப்பிக்காமல் உள்ளதால் எந்தவொரு நலவாரிய திட்டங்களின் அடிப்படையிலும் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை, ஆதலால் பல ஆயிரம் கிராம கோவில் பூசாரிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தமிழக அரசு சமீபத்தில் கொரோனா காலத்தில் கருணையின் அடிப்படையில் கொடுத்த ரூ.2 ஆயிரம் நலவாரியம் நடைமுறையிலே இல்லாத காரணத்தால் இப்பொழுது பணியாற்றும் பூசாரிகளுக்கு கிடைக்காமல் போனது. மற்ற நல வாரியங்கள் செயல்படும் போது பூசாரிகள் வாரியம் மட்டும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடப்பது ஏன் என தெரியவில்லை. பூசாரிகள் நலவாரிய உறுப்பினராக பல ஆயிரம் பேர் இருந்தும் பூசாரிகள் ஓய்வூதியத்தில் பலர் மட்டுமே பயன் பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் ஓய்வூதிய திட்டத்தில் பூசாரிகள் நலவாரிய அட்டை வைத்திருக்கும் நபர்களே 60 வயது நிறைவடைந்த நிலையில் அந்தந்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தால் அனைத்து கிராம கோவில் பூசாரிகளும் ஓய்வூதியம் பெற எளிதாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்தும் வருவாய் துறையிடம் சென்று கையொப்பம் வாங்கும் விதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் வருவாய் துறை அதிகாரிகளுக்கு இப்படிப்பட்ட நடைமுறை இருக்கிறதா என்று கேட்டு பூசாரிகளை அலைக்கழிக்கிறார்கள். எனவே பூசாரிகள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்காமல் பூசாரிகளது வயது முதிர்ந்த காலத்தில் வருமானம் இல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்துவதுடன் தகுதியான பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மூலம் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக கோயில் பூசாரிகள் முன்னேற்ற சங்க பொதுசெயலாளர் சதீஷ்கண்ணன் மனுவில் கூறியுள்ளார்.

Tags : Laying Priests Welfare Board ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை