×

ஊட்டி - கோத்தகிரி சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம் வாகன ஒட்டிகள் அவதி

ஊட்டி, நவ. 12: ஊட்டி - கோத்தகிரி சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஊட்டியில் இருந்து கோத்திகிரி வழியாக மேட்டுப்பாளையம் போன்ற சமவெளி பகுதிகளுக்கு செல்ல மாற்று பாதை உள்ளது. மழை காலங்களில் குன்னூர், மேட்டுபாளையம் நெடுஞ்சாலை சேதமடையும் சமயங்களில் நீலகிரி மாவட்டத்தை சமவெளி பகுதி மாவட்டங்களுடன் இணைக்கும் சாலையாக கோத்தகிரி சாலை விளங்குகிறது. இந்நிலையில் சமீப காலமாக கோடப்பமந்து பகுதியில் இருந்து தொட்டபெட்டா ஜங்சன் பகுதி வரை உள்ள பகுதிகளில் சிலர் சாலை ஓரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் தும்மனட்டி, இடுஹட்டி, கோத்தகிரி, கட்டபெட்டு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் மற்றும் கார், பைக் போன்ற வாகனங்களை சீராக இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
மேலும் தமிழகத்தின் தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்க்க செல்லும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே காவல்துறையினர் இச்சாலையில் ரோந்து பணிகள் மேற்கொண்டு சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Ooty - Kotagiri ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி