×

புதுகையில் 16ம் தேதி முதல்

புதுக்கோட்டை, நவ. 10: புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் நவம்பரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன்படி, நிகழாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவ. 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவ.16ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து புதுக்கோட்டையை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 16ம்தேதி முதல் அனைத்து வாக்குச் சாவடிகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் நேரில் சென்று இவற்றை பார்வையிட்டு தங்களது பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

திருத்தம் இருந்தால் வரும் டிச. 15ஆம் தேதி வரை அதே வாக்குச்சாவடிகளில் அலுவலர்களிம் வழக்கமான பணி நேரம் முடிந்த பிறகு ஒரு மணி நேரம் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம். இவை தவிர, நவ. 21 மற்றும் 22ம் தேதிகளிலும், டிச. 12 மற்றும் 13ம் தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம்களின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முகவர்களும் உடனிருந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது டிஆர்ஓ சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்