×

ஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

ஊட்டி, நவ. 10: தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் தரமான பட்டாசுகளை அங்கீகாரம் பெற்ற நபர்களிடம் வாங்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவோ காலால் உதைக்கவோ கூடாது. மீண்டும் வெடிக்க முயற்சிக்காமல் அதனை தண்ணீருக்குள் போட வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் முன்பு சுற்றுப்புறங்களை கவனித்து எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அருகில் இருந்தால் பட்டாசுகளை அதன் அருகில் வெடிக்கக்கூடாது.

 பட்டாசு கடைகள், மருத்துவமனை, பெட்ரோல் நிலையங்கள், முதியோர் இல்லங்கள், கல்வி நிலையம் மற்றும் சாலையின் நடுவில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உங்கள் மீது தீப்பிடித்து கொண்டால் ஒடாதீர்கள். கீழே படுத்து உருளுங்கள். தீக்காயத்திற்கு எண்ணெய், பேனா மை போன்றவற்றை பயன்படுத்தாமல் குளிர்ந்த சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள். எதிர்பாராதவிதமாக கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் சுத்தமான குளிர்ந்த நீரால் 10 நிமிடம் கண்களை கழுவிவிட்டு மருத்துவரை அணுக வேண்டும். பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏடிசி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர்: குன்னூர் தீயணைப்பு துறை சார்பில் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : accident ,Deepavali ,Ooty Fire Department ,
× RELATED மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...