×

ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழை மின்னணுவில் பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை, நவ.9: ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழை மின்னணு மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் அரசு கருவூல அலுவலகங்களில் நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். வயதான பல ஓய்வூதியர்கள் நேரில் சென்று ஆயுள் சான்று சமர்ப்பிப்பத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழை (Digital Life Certificate) ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.
வெற்றிகரமாக ஆயுள் சான்று சமர்பிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி உடனடியாக ஓய்வூதியர்களின் செல்போனுக்கு வந்து விடும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது. தங்கள் பகுதி தபால்காரரை அணுக முடியாத ஓய்வூதியர்கள் அருகில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த சேவையை பெற முடியும். ஓய்வூதியர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Retirees ,
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...