×

ரூ.15 கோடி மதிப்பில் பொள்ளாச்சி- பல்லடம் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

பொள்ளாச்சி, நவ.9: பொள்ளாச்சி- பல்லடம் ரோடு ரூ.15 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான கோவைரோடு, உடுமலைரோடு, பல்லடம்ரோடு, மீன்கரைரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுகிறது. இதில் வாகன போக்குவரத்து மிகுந்த பல்லடம் ரோட்டில் சில ஆண்டுக்கு முன்பு விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டது. அதிலும் டி.கோட்டாம்பட்டியிலிருந்து புளியம்பட்டி வரையிலும் மட்டுமே விரைந்து விரிவாக்கம் செய்யப்பட்டன.

ஆனால் நெகமம் வரையிலும் சில இடங்களில் மேடான பகுதி இருப்பதால் அந்த வழியாக வாகனங்கள் விரைந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே பல்லடம் ரோட்டை முறையாக அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் முதற்கட்டமாக கள்ளிப்பட்டி பிரிவிலிருந்து கரப்பாடி பிரிவு வரையிலும் உள்ள பல்லடம் ரோடு பகுதியை ரூ.15 கோடியில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.  மேலும் மேடான மூன்று இடங்களில் சுமார் 5 அடிக்கு சமப்படுத்தி விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இப்பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi ,road ,Palladam ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...