×

தண்ணீர் வரத்து குறைந்ததால் கிராமங்களில் வறண்டு வரும் தடுப்பணைகள்

பொள்ளாச்சி, நவ. 6:  பொள்ளாச்சி பகுதியில் மழையின்றி, கிராமங்களில் தடுப்பணைகளில் தண்ணீர் குறைந்து வறண்டுவருதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பனை, குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை தடுப்பணை மூலமாக சேமித்து, அதை விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விசாய நிலங்கள் பயன்பெறுகிறது.  

தாலுகாவிற்குட்பட்ட ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆழியார், சமத்தூர், கோமங்கலம், தேவம்பாடிவலசு, வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம், பூசாரிபட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட குட்டைகளும், 250க்கும் மேற்பட்ட குளங்களும்  உள்ளன. இந்த குளங்களில் மழைகாலத்தில் தண்ணீர் வெகுவாக உயர்ந்திருக்கும். இந்த ஆண்டில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. அந்நேரத்தில் கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளில் ஒரளவு தண்ணீர் தேக்கத்துடன் இருந்தது.

சில கிராமங்களில், பல ஆண்டுகளாக நிரம்பாத தடுப்பணைகளும் நிரம்பிய நிலை ஏற்பட்டது. அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, போதிய மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், அவ்வப்போது வடகிழக்கு பருவமழை சாரலுடன் பெய்து நின்றுபோனது. நேற்று எப்போதும்போல் வெயிலின் தாக்கமே அதிகரித்தது. போதிய மழையில்லாததால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் வெகுவாக குறைய துவங்கியுள்ளது.

கடந்த சில மாதமாக தண்ணீர் ததும்பியிருந்த, ஆலாம்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் வற்றி வறண்டிருப்பதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பல தடுப்பணைகளில் தண்ணீர் மிகவும் குறைவால் புதர்கள் சூழ்ந்த இடமாக உள்ளது. கிராமங்களில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் வற்றிவரும் இந்நேரத்தில் வடகிழக்கு பருவமழையாவது  கைக்கொடுக்குமா என்ற ஏக்கம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வலுத்தால் மட்டுமே, வரும் ஆண்டு  ஏப்ரல் மாதம் கோடை வரையிலும் ஓரளவு சமாளிக்க முடியும் என விவசாயிகள் பலரும் தெரிவித்தனர்.

Tags : villages ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்