×

காரியாபட்டி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கவலையில் விவசாயிகள்

காரியாபட்டி, நவ.5: காரியாபட்டி பகுதிகளில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். காரியாபட்டி பகுதிகளான அல்லிக்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், மறைக்குளம், பாப்பனம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலக்கடலை, கம்பு, சோளம், பாசிப்பயறு, பருத்தி, நெல் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

காரியாபட்டி கிராம பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால் எந்த ஒரு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். வேறு வழியில்லாமல் விவசாயம் செய்தாலும், அந்த பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி, எந்தவித மகசூலும் பெற முடியாத நிலைக்கு வந்து விடுகிறது. இப்பகுதியில் நிலக்கடலை விவசாயம் அதிகம். எனவே பயிரை பல நாட்கள் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சோளம் பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது.

பல்வேறு விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது வயல்களில் பட்டாசுகள் வைத்துக் கொண்டு வெடித்தும் காடுகளில் சுற்றி கம்பி வலைகளை போட்டு பாதுகாத்து வைத்து இருந்தாலும் அதையும் தாண்டி உள்ளே நுழைந்து பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவாயிகளின் நலன் கருதி காட்டுபன்றிகள் விவசாய நிலத்துக்கு வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,Kariyapatti ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை