×

தூத்துக்குடி வாலிபர் கொலையில் கோவில்பட்டி கோர்ட்டில் மேலும் ஒருவர் சரண்

கோவில்பட்டி, நவ. 4:  தூத்துக்குடி அ. சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன்கள் முத்துகுமார் (32), வாழ்வாங்கி (27). வேல்ராஜ், கிருஷ்ணராஜபுரம் மெயின்ரோட்டில் பகலில் இறைச்சி கடையும், இரவில் புரோட்டா கடையும் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக இளையமகன் வாழ்வாங்கி இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு வியாபாரம் முடிந்து வாழ்வாங்கி கடையை பூட்டிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், வாழ்வாங்கியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர். வடபாகம் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி ஆரோக்கியபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் எபநேசர் பிரசாத் என்ற பிரசாத் (30), தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் என்ற கட்டகாளி(38), ஆரோக்கியபுரம் கெபி தெருவைச் சேர்ந்த விஜி மகன் அந்தோனி வினோத் என்ற வினோத் (26) ஆகிய மூவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர், காளிராஜ் என்ற கட்டகாளியை கைது செய்தனர். அத்துடன் தலைமறைவான எபநேசர் பிரசாத் என்ற பிரசாத், அந்தோனி வினோத் ஆகியோரை தேடி வந்தனர். தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாழ்வாங்கி, பிரபல ரவுடியான பட்டு என்ற பட்டுராஜாவின் அண்ணன் மகன் ஆவார். பட்டுராஜா கொலைக்கு பழிக்கு பழியாக அவரை கொலை செய்த சிந்தா சரவணனை கடந்த ஆண்டு வாழ்வாங்கியின் அண்ணன் முத்துக்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்தனர். இதற்கு வாழ்வாங்கி பண உதவி செய்துள்ளார் என சிந்தா சரவணன் தரப்பினர் கருதியுள்ளனர். இதனால் சிந்தா சரவணனின் நண்பர்கள் வாழ்வாங்கியை கொலை செய்தது தெரியவந்தது.

 இக்கொலை தொடர்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மாரிகுமார் மகன் ஆனந்த் (30) என்பவர் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 2) நேற்று முன்தினம் சரணடைந்தார். இவர் பிரபல ரவுடி சிந்தா சரவணனின் தம்பி ஆவார். இந்நிலையில், கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) ஆரோக்கியபுரத்தை சேர்ந்த விஜி மகன் அந்தோணி வினோத் என்ற வினோத் (26) நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 11ம்தேதி வரை நீதிமன்ற காவலில் பேரூரணி கிளை சிறையில் வைத்து 11ம்தேதி தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 3) ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.

Tags : court ,Kovilpatti ,Thoothukudi ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!