×

கல்லறை திருநாள் அனுசரிப்பு: கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி

திருச்சி, நவ. 3: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2ம் தேதி அன்று இறந்தவர்களின் நினைவு நாளாக அஞ்சலி செலுத்தும் நிகழச்சியாக கல்லறை திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. முன்னதாக இறந்தவர்களின் கல்லறை சுத்தம் செய்து வர்ணம் பூசி தயார் செய்தனர். நேற்று கல்லறைக்கு சென்ற உறவினர்கள் படையலிட்டு சாம்பிராணி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தற்போது கொரோனா பரவலை தடுப்பிற்காக மேலப்புதூரில் ஆர்சி கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லறையின் மெயின்கேட் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் திரண்டு வந்திருந்த உறவினர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றதால் கேட் அருகே தரையில் மாலையை இட்டும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தி சென்றனர்.

ஆனாலும், ஏனைய கிறிஸ்தவ கல்லறைகளில் அஞ்சலி செலுத்தினர். ஆனாலும், ஆர்சி கல்லறையில் இன்று முன்னோர்களின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. முசிறி: முசிறியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைகளை சுத்தம் செய்து மலர்தூவி அலங்கரித்தனர். அதனை தொடர்ந்து குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏந்தியும், குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஜெபம் செய்து பிரார்த்தித்தனர். அப்போது உலக மக்கள் நலமுடன் வாழவும், வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்கள் விடுபடவும், மழை வேண்டியும் இயற்கை சீற்றங்களினால் உலக மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும் ஜெபித்தனர்.

Tags :
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது